• Mon. Apr 29th, 2024

தேமுதிக அலுவலகத்தில் எடப்பாடி பழனிச்சாமி ஆலோசனை

Byவிஷா

Mar 21, 2024

அதிமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு 5 சீட் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், இன்று தேமுதிக அலுவலகத்திற்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி வருகை தந்து, மறைந்த விஜயகாந்த் நினைவிடத்தில் மலர்துவி மரியாதை செலுத்திய பின்னர் பிரேமலதாவிஜயகாந்துடன் ஆலோசனை நடத்தினார்.

இதைத்தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய பிரேமலதாவிஜயகாந்த்..,

“2011ல் ஏற்பட்ட வெற்றிக் கூட்டணி மீண்டும் உருவாகியுள்ளது. 2011ல் கிடைத்த வெற்றிபோல் இப்போது மீண்டும் கிடைக்கும். 2026-ம் ஆண்டிலும் இந்தக் கூட்டணி நிச்சயம் தொடரும். நாளை நல்ல செய்தி தேமுதிக அலுவலகத்தில் அறிவிக்கப்படும். தேமுதிக அலுவலகத்துக்கு எடப்பாடி பழனிசாமி வரவுள்ளார். நாளைக்கு மிகப் பெரிய செய்தியை அறிவிப்போம். தேர்தல் என்றால் பலமுனை போட்டி வரும். அதிமுகவும், தேமுதிகவும் பல தேர்தல்களைச் சந்தித்துள்ளது. எண்ணிக்கை என்பது முக்கியமல்ல. யார் யார் கூட்டணி சேர்க்கிறார்கள் என்பது தான் முக்கியம். இந்தக் கூட்டணி இயற்கையான கூட்டணி.” எனத் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று தேமுதிக தலைமை அலுவலகத்திற்குச் சென்றுள்ளார். சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்திற்குச் சென்ற எடப்பாடி பழனிசாமி, விஜயகாந்த் நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
இன்னும் சற்று நேரத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களைச் சந்திக்க உள்ளனர். அப்போது, தேமுதிக போட்டியிடும் 5 தொகுதிகளின் வேட்பாளர் பட்டியலை பிரேமலதா விஜயகாந்த் அறிவிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

விருதுநகர் லோக்சபா தொகுதியில் முதல் முறையாக தேர்தலில் போட்டியிடும் விஜயகாந்த்தின் மகன் விஜய பிரபாகரன் உள்ளிட்ட 5 வேட்பாளர்களையும் எடப்பாடி பழனிசாமி அறிமுகம் செய்து வைத்து பேச உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், தேமுதிகவுக்கு ஒரு ராஜ்யசபா சீட் வழங்குவது குறித்தும் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பை வெளியிட உள்ளதாக தகவல் கசிந்துள்ளது. அடுத்த ஆண்டு இல்லாமல், 2026ஆம் ஆண்டில் காலியாகும் ராஜ்யசபா எம்.பி சீட்டுக்கான இடம் ஒன்று தேமுதிகவுக்கு வழங்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
தேமுதிக – அதிமுக கூட்டணி 2026 சட்டமன்றத் தேர்தலிலும் தொடரும் என பிரேமலதா விஜயகாந்த் நேற்று தெரிவித்திருந்தார். 2026 சட்டசபை தேர்தல் வரை இந்தக் கூட்டணியை உறுதி செய்துள்ளதாகவும், அதன்படியே ராஜ்யசபா சீட் வழங்கப்பட உள்ளதாகவும் தகவல்கள் பரபரக்கின்றன.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய பிரேமலதா விஜயகாந்த், “இன்று மாவட்ட செயலாளர்கள் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினோம். தேமுதிக வேட்பாளர்களுக்கான நேர்காணல் நடைபெற்று வருகிறது. தேமுதிக போட்டியிடும் 5 தொகுதிகளின் வேட்பாளர் பட்டியல் விரைவில் வெளியிடப்படும்.” என்றார். மேலும் பேசிய பிரேமலதா, “வரும் மார்ச் 24ஆம் தேதி நடைபெறும் திருச்சி பொதுக்கூட்டத்திற்கு அழைப்பு விடுத்தார் எடப்பாடி பழனிசாமி. நேற்று நான் அதிமுக தலைமை அலுவலகத்திற்குச் சென்ற நிலையில் இன்று அண்ணன் எடப்பாடியார் தேமுதிக தலைமைக் கழகத்திற்கு வந்திருந்தார். விஜயகாந்த் நினைவிடத்தில் தரிசனம் செய்தார். திருச்சியில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் அதிமுக கூட்டணியின் 40 வேட்பாளர்களையும் அறிமுகம் செய்கிறோம்” எனத் தெரிவித்துள்ளார். மேலும் பேசிய அவர், “விஜய பிரபாகரன் தான் வேட்பாளர் என்று யார் சொன்னது? 5 தொகுதிகளுக்கு யார் வேட்பாளர் என்பதை நாங்கள் இன்னும் முடிவு செய்யவில்லை. இப்போதுதான் நேர்காணல் நடந்துகொண்டிருக்கிறது. கொஞ்சம் பொறுமையாக இருங்கள். நேர்காணலை இன்று முடித்துவிட்டு, அதிகாரப்பூர்வமாக அறிவிப்போம். 24ஆம் தேதி திருச்சி பொதுக்கூட்டத்தில் வேட்பாளர்களை அறிமுகம் செய்வோம். 25ஆம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்வோம்” எனத் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *