• Wed. Dec 11th, 2024

எடப்பாடிக்கு மதுரையில் மூன்று எட்டப்பன்கள்.., மருதுஅழகுராஜ் காட்டம்..!

Byவிஷா

Aug 19, 2023

எடப்பாடி பழனிச்சாமிக்கு மூன்று எட்டப்பன்கள் உள்ளனர் என ஒபிஎஸ் ஆதரவாளர் மருதுஅழகுராஜ் காட்டம் தெரிவித்துள்ளார்.
மக்களவைத் தேர்தல் நெருங்க உள்ள நிலையில், தனது பலத்தை நிரூபிக்க எடப்பாடி பழனிச்சாமி மதுரையில் பிரம்மாண்டமான மாநாட்டிற்கு ஏற்பாடு செய்துள்ளார். இந்நிலையில், ஓ.பி.எஸ் ஆதரவாளர் மருதுஅழகுராஜ் செய்தியாளர்களிடம் பேசிய போது தெரிவித்ததாவது..,
மதுரை மாநாட்டிற்கு சிவகங்கையில் இருந்து மான ரோஷம் உள்ள அதிமுக தொண்டர்கள் ஏரெடுத்தும் பார்க்க மாட்டார்கள். ஒருவேளை பதவிக்கு ஆசைபட்டு, பதவியை தக்க வைக்க, பணப்பட்டுவாடாவிற்கு மயங்கியும், இவர்களின் வற்புறுத்தலின் பேரிலும் சிலர் செல்லலாம். அப்படி நடந்தாலும் மதுரை மாநாட்டையே உரிமை கேட்கும் ஆர்ப்பாட்டமாக மாற்றுவதற்கு வாய்ப்புள்ளது.
வட மாவட்டங்களில் இருந்து சி.வி.சண்முகம் மூலமும், சேலத்தில் இருந்து இளங்கோவன் மூலமும் மாநாட்டிற்கு ஆட்கள் அழைத்து வரப்படுகின்றனர். இவர்களுக்கு சிறப்பு பேட்ச்கள் அளித்து முன் வரிசையில் அமர வைக்கப்படுவர். எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான கோஷங்கள் யாராவது எழுப்பினால், அது அவரது காதுகளுக்கு செல்லாமல் பார்த்து கொள்வர்.
தமிழக அரசியலில் வலுவான வாக்கு வங்கி மற்றும் கூட்டணியுடன் திமுக முதலிடத்தில் உள்ளது. இரண்டாம் இடத்தில் இருக்கும் அதிமுக இரண்டு, மூன்றாக பிளவுற்று கிடக்கிறது. மூன்றாவது இடத்தில் இருப்பதாக பாஜக கற்பனை செய்து கொண்டிருக்கிறது. அதிமுக தொடர்ந்து பிளவுபட்டு கொண்டே இருந்தால், நாம் இரண்டாம் இடத்திற்கு சென்று அப்படியே முதலிடத்தில் தாவலாம் என கனவு கோட்டை கட்டி வருகிறது.
இதேபோல் அதிமுக பிளவுற்று கிடந்தால் தான் ஆட்சியை தக்க வைத்து கொள்ள முடியும் என்று திமுக கருதுகிறது. இவ்வாறு திமுக, பாஜக நினைப்பதை நிறைவேற்றும் இடத்தில் தான் எடப்பாடி பழனிசாமி இருக்கிறார். எனவே உண்மையான அதிமுக தொண்டர்கள் மதுரை மாநாட்டிற்கு செல்ல வேண்டாம். ஒருவேளை கட்டாயப்படுத்தி அழைத்து சென்றால் எடப்பாடியின் முன்னால் நின்று எதற்காக கட்சியை உடைத்தாய்? எனக் கேளுங்கள்.
மாநாட்டு களத்தை ஆர்ப்பாட்டாக களமாக மாற்றுங்கள். கட்டபொம்மனுக்கு ஒரு எட்டப்பன் போல, எடப்பாடிக்கு செல்லூர் ராஜூ, ராஜன் செல்லப்பா, ஆர்.பி.உதயகுமார் என மதுரையில் மூன்று எட்டப்பன்கள். இவர்கள் தங்கள் எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு மீண்டும் வெற்றி பெற்று காட்டட்டும். அதன்பிறகு நாங்கள் ஒத்து கொள்கிறோம். நீங்கள் வெற்றி பெற்றுவிட்டதாக என்று மருது அழகுராஜ் சவால் விடுத்துள்ளார்.