• Mon. Jan 19th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

அதிகாலையில் சென்னையைக் குளிர்வித்த மழை

Byவிஷா

May 9, 2024

தமிழகம் முழுவதும் கோடை வெயிலின் தாக்கம் கோரதாண்டவம் ஆடி வரும் நிலையில், சென்னையில் நேற்று அதிகாலை 4.00 மணி அளவில் பெய்த மழையால் சென்னை குளிர்ந்தது.
இந்த ஆண்டு ஏப்ரல் மாதம்தொடங்கியதிலிருந்து சென்னையில் கடும் வெயில் சுட்டெரித்து வருகிறது. வெயிலுக்குப் பயந்து பொதுமக்கள் பகல் நேரங்களில் வெளியில் செல்வதைத் தவிர்த்து வந்தனர். இரவு நேரங்களிலும் கடும் புழுக்கம் நிலவியது. இதனால் உறங்க முடியாமல் மக்கள் அவதிக்குள்ளாகி வந்தனர். கடந்த வாரங்களில் 104 டிகிரி ஃபாரன்ஹீட் அளவுக்கு மேல் வெயில் பதிவாகி இருந்தது.
வட தமிழகத்தின் உள் மாவட்டங்களில் கோடை மழை, ஆலங்கட்டி மழை பெய்து வந்தாலும், சென்னையில் அதற்கான அறிகுறியே இல்லாமல் இருந்தது. இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை முதலே ஈரப்பதம் மிகுந்த கிழக்கு திசைக் காற்று சென்னை நோக்கி பலமாக வீசி வந்தது.
பின்னர் யாரும் எதிர்பாராத வகையில் சென்னையில் பல்வேறு இடங்களில் நேற்று அதிகாலை 4 மணி அளவில் திடீரென பெரும்சத்தத்துடன் காற்று வீசியது. காற்றின் வேகத்தை தாக்குப்பிடிக்காமல் வீட்டு ஜன்னல்கள், கதவுகள் ஆடிஓசையை எழுப்பி பலரின் தூக்கத்தைக் கலைத்தது. வீட்டிலிருந்து பொருட்கள் பல தூக்கி வீசப்பட்டன. தொடர்ந்து தண்டையார்பேட்டை, கொடுங்கையூர், வியாசர்பாடி, தேனாம்பேட்டை, ஆயிரம் விளக்கு, சிந்தாதிரிப்பேட்டை, நந்தனம், சைதாப்பேட்டை, ஜாபர்கான் பேட்டை, கிண்டி, ஈக்காட்டுத்தாங்கல், அசோக் நகர், மேற்கு மாம்பலம், அடையார், பெருங்குடி எழும்பூர், கோயம்பேடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பலத்த காற்றுடன் லேசானது முதல் மிதமானமழை பெய்தது. அதிகபட்சமாக பெருங்குடியில் 6.9 மிமீ, ராயபுரத்தில் 2.7 மிமீ, மீனம்பாக்கத்தில் 1 மிமீ, நுங்கம்பாக்கத்தில் 0.5 மிமீ மழை பதிவாகியுள்ளது.
இந்த திடீர் மழையால் மாநகரில் பெரும்பாலான இடங்களில் பிற்பகல் வரை வானம் சிறிதளவு மேகமூட்டத்துடன் குளிர்ச்சியான, ரம்மியமான சூழல் நிலவியது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பில், “இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் மாலை அல்லது இரவில் லேசானது முதல் மிதமான மழை பெய்யவாய்ப்புள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.