
நடுவானில் பறந்து கொண்டிருந்த விமானத்தில் பெண் பயணி ஒருவருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட, உடனே விமானத்தில் பயணம் செய்த மருத்துவர், அவர் கையில் கட்டியிருந்த ஆப்பிள் வாட்ச் மூலம் ஆக்ஸிஜன் அளவைக் கண்டறிந்து அப்பெண்ணின் உயிரைக் காப்பாற்றிய சம்பவம் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
லண்டனில் இருந்து இத்தாலி நோக்கி விமானம் ஒன்று புறப்பட்டது. அதில், 70 வயது பிரிட்டீஷ் பெண்மணிக்கு திடீரென்று மூச்சு திணறல் ஏற்பட்டது. உடனே, அதே விமானத்தில் பயணம் செய்த மருத்துவர் ஒருவர் உதவிக்கு முன்வந்தார்.
பொதுவாக இதுபோன்று மூச்சு திணறல் ஏற்படும் சமயங்களில், நோயாளியின் ரத்தத்தில் ஆக்ஸிஜன் அளவு எவ்வளவு இருக்கிறது என்பதை தெரிந்து கொண்டு சிகிச்சை அளிக்கப்படுவது வழக்கம். ஆனால், நடுவானில் அதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை.
இந்நிலையில், அந்தப் பெண் அவருடைய கையில் கட்டி இருந்த ஸ்மார்ட் வாட்ச் மூலமாக, நுரையீரலில் இருந்து சிவப்பு ரத்த அணுக்கள் மூலமாக உடலின் பிறப்பகுதிகளுக்கு எவ்வளவு ஆக்சிஜன் கொண்டு செல்லப்படுகிறது என்ற விவரம் தெரியவந்தது. மேலும், நோயாளிக்கு ஏற்கனவே இதயம் தொடர்புடைய நோய் இருப்பதும் அறியப்பட்டது. அதன் அடிப்படையில், விமானத்தில் இருந்த ஆக்சிஜன் சிலிண்டர் கொண்டுவரப்பட்டு மருத்துவர் தொடர்ந்து கண்காணித்து வந்தார்.
ஒரு மணி நேரத்திற்கு பிறகுதான் விமானம் இத்தாலியில் தரையிறங்கியது. இதற்கிடையில், ஆப்பிள் ஸ்மார்ட் வாட்ச் உறுதுணையாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
