• Wed. Mar 26th, 2025

ஸ்மார்ட்போனை அன்லாக் செய்ய வருகிறது புதிய மாற்றம்

Byவிஷா

Jan 31, 2024

ஸ்மார்ட்போனை மூச்சுக்காற்றைப் பயன்படுத்தி அன்லாக் செய்யும் புதிய வழிமுறையைக் கண்டறியும் ஆராய்ச்சியில் சென்னை ஐஐடி ஆராய்ச்சியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
சென்னை ஐஐடி ஆராய்ச்சியாளர்கள் மக்களை அடையாளம் காண்பதற்கு புதிய வழிமுறைகளை ஆராய்ச்சி செய்து வருகின்றனர். அதாவது நம் மூச்சுக்காற்று வெளியேற்றத்தின் அளவைக் கொண்டு, ஸ்மார்ட் போனை ‘அன்லாக்’ செய்யும் வழிமுறைகளை கண்டறிந்து வருகின்றனர். ஒவ்வொரு நபரும் மூச்சுக்காற்றை வெளியேற்றும் போது தனித்துவமான ஏற்ற, இறக்க வேறுபாடு உள்ளது. இதன் அடிப்படையில் புதிய தொழில்நுட்பம் கண்டறியப்பட்டுள்ளது.
தற்போது கைரேகைகள் பயன்படுத்தப்படுவதைப் போலவே, இந்த தனித்துவமான மூச்சுக்காற்று பயோ மெட்ரிக் தொழில்நுட்பம் உள்ளது. இதனை பயோமெட்ரிக் கையொப்பமாகவும் பயன்படுத்த ஒரு முறையை பேராசிரியர் மகேஷ் பஞ்சக்னுலா தலைமையிலான சென்னை ஐஐடி மாணவர்கள் உருவாக்கியுள்ளனர்.
இக்குழுவினர் 94 பேரிடமிருந்து சுவாச மாதிரிகளை எடுத்து சோதனை நடத்தினர். இதில், புதிய தொழில்நுட்பமானது 97 சதவீத துல்லியத்துடன் சம்பந்தப்பட்ட நபரின் அடையாளத்தை சரியாக உறுதிப்படுத்துவதை கண்டறிந்தனர். இருப்பினும், ஒருவரை அவர்கள் யார் என்று முன்பே தெரியாமல் அடையாளம் காணும் போது, துல்லியம் சுமார் 50 சதவீதமாக குறைந்தது. எனவே இந்த தொழில்நுட்பத்தில் இன்னும் முன்னேற்றத்தை கண்டறிய தொடர்ந்து ஆராய்ச்சியை மேற்கொண்டு வருகின்றனர்.

ஜப்பானில் உள்ள கியூஷ{ பல்கலைக்கழகத்தில் இதேபோன்ற ஆய்வில், ஆராய்ச்சியாளர்கள் ஒரு செயற்கை மூக்கு அமைப்பை உருவாக்கினர். இது அவர்களின் மூச்சு வாசனையின் அடிப்படையில் மக்களை அடையாளம் காட்டுகிறது. இந்த அமைப்பு தனிநபர்களை அடையாளம் காண்பதில் 97.8 சதவீதம் துல்லியத்தை காட்டியது. இருப்பினும், இந்த முறை சோதனைக்கு முன் மக்கள் 6 மணி நேரம் உணவு உட்கொள்ளாமல் இருக்க வேண்டும். எனவே, இதனை நடைமுறைக்கு உரியதாக இருக்கும் வகையில் தேவையான மாற்றங்கள் குறித்த ஆராய்ச்சி தொடர்ந்து வருகிறது.
இந்த ஆராய்ச்சி சுவாசத்தை பயன்படுத்தி ஸ்மார்ட்போன்களை திறப்பதற்கு மட்டுமின்றி, பயோமெட்ரிக் தொழில்நுட்பத்தில் ஒரு குறிப்பிடத்தக்க முன்னேற்றமாகவும் கருதப்படுகிறது. இது பாதுகாப்பு, மருத்துவம் மற்றும் தனிப்பட்ட தொழில்நுட்பத்தில் நீண்டகால தாக்கங்களை ஏற்படுத்தக்கூடும்.
ஐஐடி மெட்ராஸ் மற்றும் கியூஷ{ பல்கலைக்கழக ஆராய்ச்சி, நமது சுவாசத்தின் தனித்துவமான வடிவங்களை அடையாளம் காணும் நோக்கங்களுக்காகப் பயன்படுத்துவதற்கான ஒரு புதிய வழியை முன்னெடுத்துச் செல்கிறது.