சென்னையில் கார் பந்தயம் நடத்த முக்கியத்துவம் அளித்த முதல்வர் ஸ்டாலின் மதுரை உள்ளிட்ட தமிழகத்தில் முக்கிய நகரங்களில் பராமரிப்பின்றி பழுதடைந்து விபத்துக்கு வழி வகுக்கும் சாலைகளை பராமரிக்க கொடுப்பாரா என மதுரையில் அதிமுக மருத்துவர் அணி மாநில துணை செயலாளர் உசிலம்பட்டி டாக்டர் விஜயபாண்டியன் கேள்வி எழுப்பினார்.
மதுரையில் அதிமுக மருத்துவர் அணி மாநில துணை செயலாளர் உசிலம்பட்டி டாக்டர் விஜயபாண்டியன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது..,
முன்னாள் முதல்வர்கள் ஜெயலலிதா எடப்பாடியார் தலைமையில் நடந்த அதிமுக ஆட்சியில் தமிழகம் அமைதி பூங்காவாக திகழ்ந்தது. ஆனால் திமுக பதவி ஏற்ற நாள் முதல் தமிழகத்தில் தினம் ஒரு கொலைகள் அரங்கேறி வருகின்றன. சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது. ரவுடிகள் அட்டகாசம், ஆளுங்க கட்சியினரின் அடாவடி அங்கொன்றும் இங்கொன்றுமாக அரங்கேறி வருகின்றன.
மதுரை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் சாலைகள் குண்டும் குழியுமாக பராமரிப்பு இன்றி விபத்துக்கு வழிவகுப்பதாக உள்ளன. இப்பிரச்சனைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்காத முதல்வர் ஸ்டாலின் சென்னையில் கார் பந்தயம் நடத்த முக்கியத்துவம் அளித்தது வேடிக்கையாக உள்ளது.
முல்லைப் பெரியாறு காவிரி உள்ளிட்ட பிரச்சனைகளில் முன்னாள் முதல்வர்கள் ஜெயலலிதா எடப்பாடி யார் பெற்றுத் தந்த உரிமைகளை தற்போதைய திமுக அரசு காவு கொடுத்து வருகிறது. இத்தனைக்கும் கேரளா கர்நாடகா மாநிலங்களில் திமுகவின் கூட்டணி கட்சிகள் ஆட்சியில் உள்ளன. அந்த மாநில அரசுகளிடம் பேசி தமிழகத்தின் ஜீவாதார உரிமைகளை முதல்வர் ஸ்டாலின் பெற்றுத் தர வேண்டும்.
அந்நிய முதலீடுகளை பெறுவதற்காக வெளிநாடு செல்வதாக கூறும் முதல்வர் ஸ்டாலின் இதுவரை பெற்று தந்த முதலீடுகள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.
மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் தொழில் வளர்ச்சி தமிழகத்தில் தற்போதைய திமுக ஆட்சியில் இல்லை என்பதே உண்மை. இவ்வாறு அதிமுக மருத்துவரணி மாநில துணை செயலாளர் உசிலம்பட்டி டாக்டர் விஜயபாண்டியன் கூறினார்.
