• Sat. Nov 8th, 2025
WhatsAppImage2025-11-07at0137034
previous arrow
next arrow
Read Now

மறைமுகத் தேர்தலுக்கு தயாராகும் திமுக

Byadmin

Feb 20, 2022

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் வரும் செவ்வாய்கிழமை 22-ம் தேதி வெளியாகவுள்ள நிலையில், இப்போதே மார்ச் 4-ம் தேதி நடைபெறவிருக்கும் மறைமுகத் தேர்தலுக்கான பணிகளை அரசியல் கட்சியினர் தொடங்கிவிட்டனர்.
குறிப்பாக மேயர், துணை மேயர், நகர்மன்ற தலைவர், நகர்மன்ற துணைத் தலைவர், பேரூராட்சி தலைவர் பதவியிடங்களை குறிவைத்து திமுகவிடம் காய்நகர்த்த தொடங்கிவிட்டனர் அதன் கூட்டணிக் கட்சியினர்.
தேர்தல் முடிவுகள் வெளியாகும் 22-ம் தேதிக்கு பிறகு மார்ச் 3-ம் தேதி வரை பதவிகளை கேட்டு கூட்டணிக் கட்சிகள் பஞ்சாயத்தில் ஈடுபடும் என்பதை அறிந்த திமுக தலைமை, அதனை சமாளிக்க அமைச்சர் நேரு தலைமையில் குழு ஒன்றை அமைக்கவிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

தமிழகம் முழுவதும் அமைதியான முறையில் நேற்று ஒரேகட்டமாக நடைபெற்று முடிந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான முடிவுகள் வரும் செவ்வாய்கிழமை 22-ம் தேதி வெளியிடப்படுகிறது. இதையடுத்து வெற்றிபெற்ற உறுப்பினர்களை கொண்டு மேயர், துணை மேயர், நகராட்சி சேர்மன், பேரூராட்சி சேர்மன் உள்ளிட்ட பதவியிடங்கள் மார்ச் 4-ம் தேதி நடைபெறவிருக்கும் மறைமுகத் தேர்தல் மூலம் நிரப்பப்படும். அதிமுக தனித்து போட்டியிட்டதால் இந்த விவகாரத்தில் அக்கட்சிக்கு சிக்கல் எதுவும் எழ வாய்ப்பில்லை.

ஆனால் திமுகவை பொறுத்தவரை காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள், மதிமுக, முஸ்லீம லீக், மனித நேய மக்கள் கட்சி என பல கட்சிகளுடன் கூட்டணி வைத்து தேர்தலை சந்தித்ததால், மறைமுகத் தேர்தலின் போது இந்தக் கட்சிகளை சேர்ந்தவர்களுக்கும் பதவிகள் கொடுக்க வேண்டிய சூழல் உருவாகியுள்ளது. தேர்தலுக்கு முன்னர் எந்தப் பதவி குறித்தும் கூட்டணிக் கட்சிகளிடம் திமுக தலைமை உறுதியளிக்கவில்லை என்பதும் தேர்தல் முடிந்தபிறகு பேசிக்கொள்ளலாம் என பதிலளித்ததும் குறிப்பிடத்தக்கது.

இதனிடையே மேயர் மற்றும் நகர்மன்றத் தலைவர் பதவியிடங்களை கூட்டணிக் கட்சிகளுக்கு கொடுக்க திமுக தயாராக இல்லை என்றும் வேண்டுமானால் துணை மேயர் பதவியோ, நகர்மன்ற துணைத் தலைவர் பதவியோ குறிப்பிட்ட சில இடங்களில் மட்டும் கொடுக்கக்கூடும் எனவும் தெரிவிக்கப்படுகிறது. பிப்ரவரி 23-ம் தேதி தொடங்கி மார்ச் 3-ம் தேதி வரை பதவியிடங்களை பிரித்துக்கொள்வது தொடர்பாக பஞ்சாயத்து நடக்கலாம் எனத் தெரிகிறது.

இதனிடையே வாக்கு சதவீதம், கட்சிகளின் வாக்குவங்கி, தேர்தல் பணிகள், தேர்தல் செலவு, உள்ளடி வேலை பார்த்தவர்கள் விவரம் உள்ளிட்ட பல முக்கிய புள்ளி விவரங்களை திரட்டத் தொடங்கியுள்ள திமுக, இதனைக் கூட்டணிக் கட்சிகளிடம் விலாவாரியாக எடுத்துரைக்க திட்டமிட்டுள்ளதாம். மேலும் அமைச்சர்கள் நேரு, செந்தில்பாலாஜி, துரைமுருகன், பொன்முடி உள்ளிட்டோர் அடங்கிய குழு ஒன்றையும் 22-ம் தேதிக்கு பிறகு அமைக்கும் எனத் தெரிவிக்கப்படுகிறது.