

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு தொடங்கிய உடனேயே தமிழ்நாட்டுக்கு கல்வி நிதி மறுத்த விவகாரத்தை கையில் எடுத்த தி.மு.க., எம்.பி க்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர். இதற்கு பதில் அளித்த மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான், தேசிய கல்விக் கொள்கை மூலம் இந்தி திணைக்கப்படுகிறது என்பது தவறானது.

தமிழ்நாட்டு மாணவர்களை தி.மு.க தவறாக வழி நடத்தி அரசியல் செய்கிறது. தமிழ்நாட்டு மாணவர்களின் எதிர்காலத்தை மாநில அரசு பாழ்படுத்தி வருகிறது, தமிழக எம்.பி க்கள் நாகரீகமற்றவர்கள், ஜனநாயக விரோதமானவர்கள் என்று பேசினார்.
தர்மேந்திர பிரதானின் இந்த பேச்சுக்கு, கோவையில் தி.மு.க சார்பில் உருவ பொம்மை எரிக்கும் போராட்டம் நடத்தப்பட்டது. காந்திபுரம் நகர பேருந்து நிலையம் அருகே உள்ள அண்ணாசிலை முன்பு, மத்திய அமைச்சருக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பி, பெட்ரோல் ஊற்றி தர்மேந்திர பிரதானி உருவ பொம்மையை எரித்து, கண்டன முழக்கங்களை எழுப்பினர். கோவை மாநகர் மாவட்ட செயலாளர் முன்னாள் எம்.எல்.ஏ கார்த்தி தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் தி.மு.க வினர் பலர் கலந்து கொண்டனர்.

