மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தை ஒழிக்கும் நோக்கில் ஒன்றிய பாஜக அரசு கொண்டு வந்துள்ள சட்டத்தை உடனடியாக திரும்பப் பெற வலியுறுத்தி, விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பாக இன்று காலை 10 மணியளவில் திமுக தலைமையில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் எழுச்சியுடன் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டம், மக்கள் விரோத சட்டத்திற்கு ஒத்து ஊதும் அதிமுகவையும் கடுமையாக கண்டிக்கும் வகையில் நடத்தப்பட்டது.

ஆர்ப்பாட்டத்திற்கு திமுக மேற்கு ஒன்றிய செயலாளர் வி. ஜெயபாண்டியன், திமுக கிழக்கு ஒன்றிய செயலாளர் எம். கிருஷ்ணகுமார் ஆகியோர் தலைமை வகித்தனர்.
சாத்தூர் சட்டமன்ற உறுப்பினர் ஏ.ஆர்.ஆர். ரகுராமன் அவர்கள் முன்னிலை வகித்து கண்டன உரையாற்றினார்.

ஆர்ப்பாட்டத்தில் பேசிய தலைவர்கள், கிராமப்புற ஏழைகள், விவசாயத் தொழிலாளர்கள், பெண்கள் உள்ளிட்ட கோடிக்கணக்கான மக்களின் வாழ்வாதாரமாக விளங்கும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தை ஒழிக்கும் முயற்சிகள் மக்கள் விரோதமானவை என்றும், சமூகநீதிக்கும் அரசியலமைப்புச் சிந்தனைகளுக்கும் எதிரானவை என்றும் கடுமையாக சாடினர்.

மேலும், ஒன்றிய பாஜக அரசு கொண்டு வரும் மக்கள் விரோத சட்டங்களுக்கு எதிராக குரல் கொடுக்க வேண்டிய அதிமுக, அதற்கு ஒத்து ஊதும் வகையில் செயல்படுவது தமிழ்நாட்டு மக்களுக்கு செய்யும் துரோகம் என்றும், இது மாநில உரிமைகளையும் ஏழை மக்களின் வாழ்வாதாரத்தையும் பறிக்கும் செயல் என்றும் குற்றம் சாட்டினர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் திமுக மற்றும் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகளைச் சேர்ந்த மாவட்ட, ஒன்றிய, கிளை நிர்வாகிகள், கழக உடன்பிறப்புகள், மகளிர் அணி, இளைஞர் அணி, மாணவர் அணி, தொழிற்சங்க நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட 1,500-க்கும் மேற்பட்டோர் திரளாக கலந்து கொண்டு ஒன்றிய அரசின் மக்கள் விரோத நடவடிக்கைகளுக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பினர்.




