தொகுதி மறுசீரமைப்பு விவகாரம் தொடர்பாக ஆந்திர மாநில முன்னாள் முதல்வரும், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி தலைவருமான ஜெகன் மோகன் ரெட்டியை திமுக குழு சந்தித்தது.
இந்தியாவில் மக்களவைத் தொகுதிகளை மக்கள் தொகையின் அடிப்படையில் மறு சீரமைப்பு செய்ய மத்திய அரசு திட்டமிட்டு வருகிறது. ஆனால், மத்திய அரசின் இந்த முடிவுக்கு தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. தொகுதி மறுசீரமைப்பு நடந்தால் தமிழ்நாட்டில் உள்ள மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கை குறையும் என திமுக உள்ளிட்ட கட்சிகள் எண்ணுகின்றன.
தொகுதி மறுசீரமைப்புக்கு எதிராக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்துக்கட்சி கூட்டம் கடந்த 5-ம் தேதி நடைபெற்றது. இதில் தொகுதி மறுசீரமைப்புக்கு எதிராக பல்வேறு மாநில முதல்வர்கள், கட்சி தலைவர்களை சந்தித்து ஆதரவு கோருவது என முடிவு செய்தது. இதற்காக திமக அமைச்சர்கள், எம்.பிக்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டது.
இந்த நிலையில், தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக ஆந்திர முன்னாள் முதலமைச்சரும், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி தலைவருமான ஜெகன் மோகனை தமிழக அமைச்சர் எ.வ.வேலு, மாநிலங்களவை உறுப்பினர் வில்சன் ஆகியோர் சந்தித்து பேசினர். தெலுங்கு தேசம் கட்சியின் மாநில தலைவர் பல்லா சீனிவாசராவுடனும் ஜெகன் மோகனை சந்தித்து பேசிய திமுக குழு, சென்னையில் வரும் 22-ம் தேதி நடைபெறும் அனைத்துக்கட்சி கூட்டத்தில் பங்கேற்குமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
முன்னதாக தமிழக தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, மக்களவை உறுப்பினர் தயாநிதி மாறன் ஆகியோர் ஒடிசா முன்னாள் முதல்வர் நவீன் பட்நாயக்கை நேற்று நேரில் சந்தித்து கூட்டத்தில் கலந்து கொள்ள அழைப்பு விடுத்தனர்.