ஆண்டிபட்டி பேரூராட்சி தலைவராக 5வது வார்டு திமுக உறுப்பினர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.
தமிழகம் முழுவதும் கடந்த 19ம் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடந்து முடிந்தது. அதனைத் தொடர்ந்து கடந்த 22ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டது .
அதன்படி, ஆண்டிபட்டி பேரூராட்சியில் உள்ள 18 கவுன்சிலர் இடங்களுக்கு திமுக சார்பில் 9 பேரும், கூட்டணி கட்சியான இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆகியவை தலா ஒரு இடத்திலும், அதிமுக 5 இடங்களிலும், சுயேச்சைகள் 2 இடங்களிலும் வெற்றி பெற்றனர். இதனையடுத்து கடந்த 2ஆம் தேதி தேர்ந்தெடுக்கப்பட்ட கவுன்சிலர்கள் பதவி ஏற்றுக் கொண்டனர்.
இந்நிலையில், நேற்று தலைவர், துணைத் தலைவர் தேர்தல் நடைபெற்றது. இதில் 9 திமுக கவுன்சிலர்கள், இரண்டு கம்யூனிஸ்ட் கவுன்சிலர்கள் மற்றும் சுயேட்சை வேட்பாளர் முத்துராமன் ஆகியோர் பேரவை கூட்டத்தில் கலந்துகொண்டனர்.அதிமுக வேட்பாளர்கள் 5 பேரும், ஒரு சுயேட்சை வேட்பாளரும் கலந்துகொள்ளவில்லை.
இந்நிலையில் 5வது வார்டு கவுன்சிலர் சந்திரகலா தலைவராக வேட்பு மனு தாக்கல் செய்தார். ஒருவர் மட்டுமே மனுத் தாக்கல் செய்திருந்ததால், தேர்தல் நடத்தும் அலுவலர் சின்னச்சாமி பாண்டியன் சந்திரகலா போட்டியின்றி தலைவராக தேர்ந்தெடுக்கப் பட்டதாக அறிவித்தார். இதனையடுத்து கவுன்சிலர்களும் திமுக நிர்வாகிகளும் தலைவராக தேர்வு செய்யப்பட்ட சந்திரகலா விற்கு மாலை, பொன்னாடை போர்த்தி வாழ்த்து தெரிவித்தனர்..