• Thu. Nov 5th, 2026

தீபாவளி வசூல்; கடைக்கு ரூபாய் 10,000 வீதம் லஞ்சம் – கோவையில் அதிகாரி சிக்கினார்!

BySeenu

Nov 5, 2026

தீபாவளி பண்டிகை வருகிற 8-ந் தேதி கொண்டாடப்படுகிறது. இந்த பண்டிகையையொட்டி அரசு அலுவலகத்தில் பணியாற்றி வரும் ஊழியர்கள் பலர் லஞ்சம் வாங்குவதாக கோவை மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

இந்த நிலையில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸ் துணை சூப்பிரண்டு இமானுவேல் ஞானசேகரன் தலைமையில், கோவை புலியகுளத்தில் உள்ள மாநகராட்சி உணவு பாதுகாப்புத்துறை அலுவலகத்துக்கு சென்றனர். அங்கு உணவு பாதுகாப்புத்துறை அதிகாரியாக பணியாற்றி வரும் கோவையை சேர்ந்த ராமசாமி (வயது 45) என்பவர் அறைக்கு சென்று திடீரென்று அதிரடி சோதனை நடத்தினர்.

அப்போது அந்த அலுவலகத்தில் அவருடைய அறையில் இருக்கும் மேஜையில் 6 கவர்கள் இருந்தன. அதற்குள் ரூ.57 ஆயிரம் இருந்தது. உடனே போலீசார் அந்த பணத்துக்கு கணக்கு கேட்டனர். ஆனால் அந்த பணத்துக்கு எந்த கணக்கும் இல்லை. எனவே அது கணக்கில் வராத பணம் என்பதும், பொதுமக்களிடம் இருந்து தவறான முறையில் பெறப்பட்டது என்பதும் தெரியவந்தது.

இதை அடுத்து போலீசார் ராமசாமியிடம் இருந்து கணக்கில் வராத ரூ.57 ஆயிரத்தை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து ராமசாமியிடம் போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.