விருதுநகர் அருகே கட்டனார்பட்டியில் கோவிந்தநல்லூர் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ஈஸ்வரி என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை செயல்பட்டு வருகிறது. இந்த பட்டாசு ஆலையில் விடுமுறை நாளான இன்று விதியை மீறி தொழிலாளர்கள் பட்டாசு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது திடீரென பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது.

இதனால் பல கிலோமீட்டர் தூரத்திற்கு கடும் அதிர்வு ஏற்பட்டது. மேலும் விண்ணை முட்டும் அளவிற்கு புகை கிளம்பியதால் சுற்றுவட்டார கிராம மக்கள் பீதியடைந்தனர். இந்த வெடி விபத்தில் 4 அறைகள் தரைமட்டமான நிலையில் ஆலையில் பணி செய்து கொண்டிருந்த 23 தொழிலாளர்கள் பரிதாபமாக உடல் கருகி உயிரிழந்தனர். மேலும் 6 தொழிலாளர்கள் பலத்த காயத்துடன் விருதுநகர் அரசு மருத்துவமனை மருத்துவ கல்லூரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
தொடர்ந்து மீட்பு பணியில் நடந்து கொண்டிருந்தபோது திடீரென மீண்டும் பயங்கரமான சத்தத்துடன் வெடி விபத்து ஏற்பட்டதால் மீட்பு பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த 5 தீயணைப்புத் துறையினர் 4 காவலர் உள்ளிட்ட 13 பேர் காயமடைந்தனர். மீண்டும் விபத்து ஏற்பட்டபோது ஆட்சியர் சுகபுத்ரா மற்றும் எஸ்.பி., ஸ்ரீநாதா ஆகியோர் அதிஷ்டவசமாக உயிர் தப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த வெடி விபத்து தொடர்பாக வச்சக்காரப்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இன்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாளில் உரிய அனுமதி இன்றி பணி நடந்ததும் விதிமுறையை மீறி பட்டாசு தயாரிக்க தேவையான வெடி பொருள் அல்லாத காகிதம், அட்டை, காகித குழாய் , பசை போன்ற அபாயகரமற்ற பொருட்களை சேமித்து வைக்கக்கூடிய குடோனில் வைத்து 35 பேர் ஒரே அறையில் வைத்து உச்ச நீதிமன்றத்தால் தடை செய்யப்பட்ட சரவெடி பட்டாசு தயாரித்தது தெரிய வந்துள்ளது.
ஒரே அறையில் 30க்கும் மேற்பட்டோர் பணியாற்றியதும் உயிரிழப்பு அதிகரித்ததற்கு முக்கிய காரணம் என கூறப்படுகிறது.

அளவுக்கு அதிகமான தொழிலாளர்களை அனுமதிக்கப்பட்ட அளவைவிட அதிகமான ரசாயன மூலப் பொருட்களை பயன்படுத்தி பட்டாசு தயாரித்த போது வெடி விபத்து ஏற்பட்டது தெரியவந்துள்ளது. விதிமுறையை மீறியதன் காரணமாகவே வெடி விபத்து ஏற்பட்டது. விசாரணையில் தெரிய வந்துள்ளது. மேலும் வெடி விபத்து ஏற்பட்ட வனஜா பட்டாசு ஆலை ஏற்கனவே கடந்த ஆண்டு விதிமீறல் காரணமாக உரிமம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டு மீண்டும் பணி செய்ய உரிமம் வழங்கப்பட்டது தெரிய வந்துள்ளது.



