• Tue. Jan 13th, 2026
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

திமுக காரர் திருமணத்தில் பங்கேற்றதால் அதிமுகவில் இருந்து நீக்கம்?

அதிமுகவின் மாநிலங்களவை உறுப்பினராக இருப்பவர் நவநீதகிருஷ்ணன். இவர் அதிமுகவின் வழக்கறிஞர் பிரிவுச் செயலாளராகவும் பணியாற்றி வருகிறார்.

திமுகவைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினரும் அக்கட்சியின் செய்தித்தொடர்பு செயலாளருமான இளங்கோவனின் மகள் திருமணம் நேற்று அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் நடைபெற்றது.

தமிழ்நாடு முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் இந்தத் திருமணத்தை நடத்தி வைத்தார்.

திமுக தலைமையிடமான அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற அந்த திருமண நிகழ்ச்சியில் அதிமுக பாராளுமன்ற உறுப்பினர் நவநீதகிருஷ்ணன் பங்கேற்றார்.

அந்த நிகழ்ச்சியின் போது பேசிய நவநீதகிருஷ்ணன், மாநிலங்களவைக்கு நான் சென்றபோது எனக்குப் பல விசயங்கள் தெரியாது. அப்போது, டிகேஎஸ் இளங்கோவன், கனிமொழி (திமுக உறுப்பினர்கள்) உள்ளிட்டோர் எனக்கு நிறைய விசயங்களைக் கற்றுக்கொடுத்தனர்’ என்றார்.

திமுக தலைமையிடத்தில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில் கலந்துகொண்டு அதிமுக உறுப்பினர் நவநீதகிருஷ்ணன் இவ்வாறு பேசிய நிகழ்வு தமிழ்நாடு அரசியலில் பெரும் பேசுபொருளானது.

இந்நிலையில், அதிமுக வழக்கறிஞர் பிரிவுச் செயலாளர் பொறுப்பில் இருந்து நவநீதகிருஷ்ணன் நீக்கப்படுவதாக அதிமுக தலைமை இன்று அறிவித்துள்ளது.

இது தொடர்பாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கையில், அதிமுக வழக்கறிஞர் பிரிவுச் செயலாளர் பொறுப்பில் இருக்கும் நவநீதகிருஷ்ணன் எம்.பி இன்று முதல் அப்பொறுப்பில் இருந்து விடுவிக்கப்படுகிறார்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவருடைய பதவிக்காலம் ஜூன் 2022 வரை அதாவது இன்னும் நான்கு மாதங்கள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.