• Thu. Apr 25th, 2024

விருதுநகர் அருகே சங்க கால வடிகுழாயுடன் கூடிய உறைகிணறு கண்டுபிடிப்பு.

ByA.Tamilselvan

Apr 19, 2022

விருதுநகர் மாவட்டம் நரிக்குடி அருகே கிருதுமால் ஆற்றங்கரையில் சங்க கால வடிகுழாயுடன் கூடிய உறைகிணறு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
விருதுநகர் மாவட்டம் திருச்சுழி வட்டம் நெடுகனேந்தல் கிராமத்தில் பாண்டியநாடு பண்பாட்டு மைய வரலாற்று ஆர்வலர்கள் கிருதுமால் நதியின் கிழக்கு கரையில் மேற்பரப்பை ஆய்வு செய்தனர். அப்போது சங்ககாலத்தை சேர்ந்த வடிகுழாயுடன் கூடிய உறைகிணறு கண்டுபிடிக்கப்பட்டது.

மேலும் இந்த ஆய்வு குறித்து அவர்கள் கூறியதாவது, மக்கள் முதன் முதலில் நீர் நிலைகளின் அருகில் தான் குடியேறினார்கள். அதிலும் குறிப்பாக ஆற்றங்கரை பகுதிகளில் தான் குடியேறினார்கள். விவசாயத்திற்கும், கால்நடைகள் வளர்ப்பதற்க்கும் தண்ணீர் தேவை அதற்கு இந்த ஆறுகள் மிகவும் உதவியாக இருந்தன. அது போல் ஆற்றில் வரும் நீரை நேரடியாக குடி நீராக பயன் படுத்த முடியாது. அதற்காகத் தான் இந்த உறை கிணறும் , இந்த உறை கிணறுக்கு நீர் கொண்டு வர நீர் வடிகுழாயும் பயன்படுத்தப்பட்டன. நாங்கள் கண்டறிந்த உறை கிணறானது மிகவும் தொன்மையானது ஆகும். அந்த கிணற்றில் நீர் பாயும் விதமாக வடிவமைக்கப்பட்ட வடிகுழாய் மண் அரிப்பினால் தெளிவாக தென்பட்டது அதனருகில் ஏராளமான கருப்பு, மற்றும் சிவப்பு நிற பானை ஓடுகளும், அந்த பகுதியில் பரவிக் கிடக்கின்றன.
இங்கு காணப்பட்ட உறைகிணறு உறையின் உயரம் 1 1/2அடியும் அதன் தடிமன் 2 இன்ச் அளவிலும், இந்த உறையானது
மேற்பகுதி குவிந்தும் கீழ்ப்பகுதி சற்றே விரிந்தும் ஒவ்வொரு உறையும் அடுத்தடுத்து பொருந்தும் விதமாக வடிவமைத்துள்ளனர். தற்போது வெளியில் தெரியும் உறையின் எண்ணிக்கை 6 ஆகும் மேலும் இந்த உறை கிணற்றிற்கு நீர் சேமிக்கும் விதமாக நீர் வடிகுழாய் அமைப்பும் தென்பட்டது, இந்தக் குழாய்களின் எண்ணிக்கை 10 ஆகும் ஒவ்வொரு குழாயின் நீளம் 1 அடி இருக்கிறது ஒரு பகுதி குவிந்தும் மற்றொரு பகுதி சற்றே விரிந்தும் ஒன்றன்பின் ஒன்றாக பொருந்தும் விதமாக குழாய்களை வடிவமைத்துள்ளனர். இங்கு காணப்படும் உறைகிணறு வடிகுழாய், பானை ஓடுகளை பார்க்கும்போது சங்க கால மக்கள் தற்போதைய நரிக்குடி அருகே கிருதுமால் ஆற்றங்கரையில் ஒரு நாகரிக வாழ்க்கையை வாழ்ந்து வந்துள்ளனர் என்பது தெளிவாகிறது.
மேலும் இந்த தொல்லியல் பொருட்கள் கிடைத்த இடத்தில் அரசு முறையான அகழாய்வு மேற்கொண்டால் பல புதிய தடயங்களை வெளிக்கொனர வாய்ப்பாக அமையும் என்று அவர்கள் கூறினர்.
இந்த ஆய்வில் அக்னீஸ்வரன்,யோக பிரகாஷ், தனுஷ்பாபு பாண்டியநாடு பண்பாட்டு மைய வரலாற்று ஆர்வலர்கள் தாமரைக்கண்ணன், மீனாட்சி சுந்தரம் மற்றும் ஸ்ரீதர் ஆகியோர் ஆகியோர் பங்கேற்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *