• Sat. Feb 15th, 2025

மிஷ்கினின் ஆபாச பேச்சை ரசித்த ரஞ்சித், அமீர், வெற்றிமாறனுக்கு கண்டனம்… வெடிக்கும் சர்ச்சை!

ByIyamadurai

Jan 22, 2025

மிஷ்கின் பேசிய ஆபாச பேச்சை கண்டிக்காமல் சிரித்து கடந்து போன பா.ரஞ்சித், அமீர், வெற்றிமாறன் உள்ளிட்டோரை கண்டிப்பதாக இயக்குநர் லெனின் பாரதி கூறியுள்ளார்.

இயக்குனர் பா.ரஞ்சித்தின் நீலம் புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில் அறிமுக இயக்குநர் தினகரன் சிவலிங்கம் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘பாட்டல் ராதா’. குரு சோமசுந்தரம் நடிப்பில் உருவாகியுள்ள இப்படம் வரும் 24-ம் தேதி ரிலீஸாக உள்ளது. ஷான் ரோல்டன் இசையமைத்துள்ள இப்படத்தின் டீசர் முன்னதாக வெளியாகியிருந்தது.

இப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா சமீபத்தில் சென்னையில் நடந்தது. இதில் சிறப்பு விருந்தினர்களாக இயக்குநர்கள் அமீர், வெற்றிமாறன், மிஷ்கின், லிங்குசாமி உள்ளிட்ட பல்வேறு பிரபலங்கள் கலந்து கொண்டு படக்குழுவினரை வாழ்த்தினர்.

இதில் மிஷ்கின் பேசும்போது, தொடர்ந்து ஆபாச வார்த்தைகளைப் பயன்படுத்திப் பேசினார். மேலும் அவர் ஆபாச வார்த்தைகளைப் பேசப் பேச, அங்கு இருந்த திரைத்துறையினர் பலரும் கைதட்டிச் சிரித்து, விசில் அடித்து ஆரவாரம் செய்தனர். இது பலரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. அத்துடன், இந்த நிகழ்வும் சர்ச்சையானது.

இந்நிலையில் ‘மேற்குத் தொடர்ச்சி மலை’ படத்தின் இயக்குநர் லெனின் பாரதி தனது எக்ஸ் பக்கத்தில், ஓரு பதிவை இன்று வெளியிட்டுள்ளார். அதில், “பாட்டல் ராதா டிரெய்லர் வெளியீட்டில் பெண்கள் பற்றி தட்டையான பொதுபுத்தியில் மிஷ்கின் பேசிய ஆபாச பேச்சை கண்டிக்காமல் சிரித்து கடந்து போன பா.ரஞ்சித், அமீர், வெற்றிமாறன் உள்ளிட்ட மேடையிலிருந்த அத்தனை படைப்பாளர்களுக்கும் எனது கண்டனத்தைப் பதிவு செய்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார். மிஷ்கினின் பேச்சு சமூக வலைதளங்களில் தொடர்ந்து விமர்சனம் செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.