ஐபிஎல் 2023 கிரிக்கெட் தொடரின் 16வது சீசனில் ஆர்சிபி – சிஎஸ்கே இடையேயான போட்டி நேற்று பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் நடந்தது. இதில் டாஸ் வென்ற ஆர்சிபி அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது.
அதன்படி முதலில் ஆடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ருத்துராஜ் கெய்வாட் ஏமாற்றம் அளித்தார். அடுத்து வந்த ரஹானே மற்றும் கான்வே இருவரும் ஆர்சிபி அணியின் பந்து வீச்சை துவம்சம் செய்தனர்.
அதிரடியாக ஆடிய ரஹானே 20 பந்தில் 37 ரன்கள் அடித்தார். அதன்பின்னர் கான்வேவுடன் ஜோடி சேர்ந்த ஷிவம் துபேவும் அதிரடியாக ஆடினார். கான்வே மற்றும் துபே ஆகிய இருவரும் அடித்து ஆடி அரைசதம் அடித்தனர்.
டெவான் கான்வே 45 பந்தில் 83 ரன்களையும், துபே 27 பந்தில் 52 ரன்களையும் குவித்தனர். கான்வே, துபேவின் அதிரடி அரைசதத்தால் 20 ஓவரில் 226 ரன்களை குவித்தது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி
227 ரன்கள் என்ற கடினமான இலக்கை விரட்டிய பெங்களுர்ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் தொடக்க வீரர் விராட் கோலி 6 ரன்களுக்கும், மஹிபால் லோம்ரார் ரன்னே அடிக்காமலும் ஆட்டமிழந்தனர். ஆனால் கேப்டனும் தொடக்க வீரருமான ஃபாஃப் டுப்ளெசிஸும், மேக்ஸ்வெல்லும் இணைந்து காட்டடி அடித்து இருவருமே அரைசதம் அடித்தனர்.
இதையடுத்து 3வது விக்கெட்டுக்கு டுப்ளெசிஸ் – மேக்ஸ்வெல் இணைந்து 126 ரன்களை குவித்தனர். பெங்களூருவில் சிக்ஸர் மழை பொழிந்த மேக்ஸ்வெல், 36 பந்தில் 8 சிக்ஸர்களுடன் 76 ரன்களை குவித்து ஆட்டமிழக்க, டுப்ளெசிஸும் 62 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அதன் பின்னர் அதிரடியாக ஆடிய தினேஷ் கார்த்திக்கும் 14 பந்தில் 28 ரன்கள் அடித்து ஆட்டமிழக்க, அதன் பின்னர் இம்பேக்ட் பிளேயராக இறங்கிய பிரபுதேசாய் 11 பந்தில் 2 சிக்ஸர்களுடன் 19 ரன்கள் அடித்தாலும் கூட, ஆர்சிபி அணியால் 20 ஓவரில் 218 ரன்கள் தான் அடிக்க முடிந்தது. இதன் மூலம் 8 ரன் வித்தியாசத்தில் சிஎஸ்கே அணி அபார வெற்றி பெற்றது.இந்த வெற்றியின் மூலமாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 5 போட்டிகளில் விளையாடி 3 போட்டிகளில் வெற்றி கண்டுள்ளது. இந்த நிலையில், சென்னை போட்டி என்றாலே சினிமா பிரபலங்கள் கண்டிப்பாக வருவது உண்டு. இதுவே சென்னையில் போட்டி நடந்திருந்தால் சொல்லவே வேணாம், கோலிவுட் வட்டாரமே சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் ஒன்று கூடி விடுவார்கள். இது பெங்களூருவில் நடந்த போட்டி என்பதால், அங்கு நடிகர் தனுஷ் தான் நடிக்கும் கேப்டன் மில்லர் பட கெட்டப்பில் வந்துள்ளார். அப்போது அவருடன் கன்னட நடிகர் ஷிவராஜ் குமாரும் வந்திருந்தார். இருவரும் ஒன்றாக அமர்ந்து போட்டியை பார்த்துள்ளனர். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.