• Wed. Jan 7th, 2026
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

சபரிமலை – பம்பையில் குளிக்க பக்தர்களுக்கு தடை

Byமதி

Oct 31, 2021

சபரிமலையில் மண்டல, மகரவிளக்கு காலத்தில் வரும் பக்தர்களுக்கு பம்பையில் குளிக்க அனுமதியில்லை என்று கேரள தேவசம் போர்டு அமைச்சர் ராதாகிருஷ்ணன் கூறினார்.

சபரிமலை ஐயப்பன் கோயிலில் இந்த வருடத்துக்கான மண்டல கால பூஜைகள் நவம்பர் 16ம் தேதி தொடங்குகிறது. இதற்காக முந்தைய நாளான 15ம் தேதி, மாலை 5 மணிக்கு நடை திறக்கப்படுகிறது. 41 நாள் நீளும் மண்டல காலம் டிசம்பர் 26ம் தேதி நடைபெறும் மண்டல பூஜையுடன் நிறைவடையும். அதைத் தொடர்ந்து மகரவிளக்கு பூஜைகளுக்காக டிசம்பர் 30ம் தேதி மீண்டும் நடை திறக்கப்படும்.

இந்த நிலையில் மண்டல, மகரவிளக்கு பூஜைகளை முன்னிட்டு பக்தர்களுக்கு ஏற்படுத்த வேண்டிய வசதிகள் குறித்த ஆய்வு கூட்டம் பம்பையில் நடந்தது. இதற்கு தேவசம் போர்டு அமைச்சர் ராதாகிருஷ்ணன் தலைமை வகித்தார்.
கூட்டத்திற்கு பிறகு அமைச்சர் ராதாகிருஷ்ணன் கூறியதாவது, சபரிமலையில் மண்டல, மகரவிளக்கு காலத்தில் தினமும் 25 ஆயிரம் பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள். மொத்தம் 15.25 லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி கிடைக்கும். ஆன் லைன் முன்பதிவு ஏற்கனவே தொடங்கிவிட்டது. இதுவரை 10 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் முன்பதிவு செய்துள்ளனர்.
சபரிமலைக்கு இந்த வருடமும் பெரிய பாதை வழியாக பக்தர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள். கடந்த 2 வருடங்களாக இந்த பாதையில் பக்தர்கள் செல்லாததால் வன விலங்குகள் அதிகமாக காணப்படுகிறது. எனவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கொரோனா வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்றப்படும். மண்டல, மகரவிளக்கு காலத்தில் சபரிமலை வரும் பக்தர்களுக்கு பம்பை ஆற்றில் குளிக்க அனுமதி யில்லை. இந்த வருடமும் சன்னிதானத்தில் பக்தர்கள் தங்க அனுமதி இல்லை. பக்தர்கள் நெய் அபிஷேகம் நடத்தலாம். இவ்வாறு அவர் கூறினார்.