வெம்பக்கோட்டை ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து, கலெக்டர் ஜெயசீலன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
வெம்பக்கோட்டை ஒன்றியம், கங்கர்செவல் ஊராட்சி, கே.லட்சுமியாபுரம் கிராமத்தில், பிரதம மந்திரி குடியிருப்பு திட்டத்தின் கீழ், ரூபாய்.இரண்டு லட்சத்து நாற்பதாயிரம் மானியத்தில் குடியிருப்பு வீடுகள் கட்டப்பட்டு வருவதையும், குண்டாயிருப்பு ஊராட்சியில், பாறைபட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ரூபாய் ஐம்பத்து ஒரு லட்சம் மதிப்பில் புதிய கணினி அறை மற்றும் வகுப்பறைகள் கட்டப்பட்டு வருவதை பார்வையிட்டு, மாணவர்களுக்கு வழங்கப்படும் மதிய உணவின் தரம், பயன்பெறும் மாணவர்கள் குறித்தும் ஆய்வு செய்தார்.

பின்னர், டி.கரிசல்குளம் ஊராட்சியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூபாய் பதினாறு லட்சத்து ஐம்பதாயிரம் மதிப்பீட்டில் புதிய அங்கன்வாடி மையம் கட்டி முடிக்கப்பட்டுள்ளதையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வின் போது, அரசின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு திட்ட பணிகள் மற்றும் நலத்திட்டங்கள் முறையாக மக்களை சென்றடைகிறதா என பொதுமக்கள் மற்றும் பயனாளிகளிடம் கலந்துரையாடினார், அவர்களின் கருத்துக்களை கேட்டறிந்தார். மேலும், நடைபெற்று வரும் பணிகளை விரைவாகவும், தரமானதாகவும் குறிப்பிட்ட காலத்திற்குள் முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவர சம்மந்தப்பட்ட அரசு அலுவலர்களை அறிவுறுத்தினார். ஆய்வின்போது கங்கர்செவல் பகுதியில் கலைஞர் கனவு இல்லம் திட்டத்தில் இரண்டு நபர்கள் வீடுகள் ஒதுக்க வேண்டுமென மனுக்கள் கொடுத்தனர். மாற்றுத்திறனாளி வாகனம் வேண்டும் டி. கரிசல்குளத்தில் இருந்து கண்மாய்பட்டி ரோடு சீரமைக்க வேண்டும் எனவும் குண்டாயிருப்பில் மேல்நிலைத் தொட்டி அமைக்க வேண்டும் எனவும் பொது மக்கள் மனுக்கள் கொடுத்தனர்.

இந்த ஆய்வின் போது ஆணையாளர் லியாகத்அலி , வட்டார வளர்ச்சி அலுவலர்கள், (கிராம ஊராட்சிகள்) மகேஸ்வரி பொறியாளர் முத்துக்குமார் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
