• Fri. Mar 29th, 2024

தொழில்நுட்பவியல் துறை பெயர் மாற்றம்

ByA.Tamilselvan

Jun 15, 2022

தகவல் தொழில்நுட்பவியல் துறையை “தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை” என பெயர் மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில் கூறப்பட்டிருப்பதாவது, மாநிலத்தில் தகவல் தொழில்நுட்பத் துறையின் வளர்ச்சிக்கு ஆதரவளிக்கவும், மின் ஆளுகையின் வளர்ச்சியை உறுதிசெய்யும் நோக்கத்துடனும் தகவல் தொழில்நுட்பவியல் துறை கடந்த 1998-ம் ஆண்டு அக்டோபர் 5-ம் தேதி உருவாக்கப்பட்டது.தகவல் தொழில்நுட்பம் மற்றும் தகவல் தொழில்நுட்பசேவைத் துறைகளின் வளர்ச்சியானது ஒன்றுக்கொன்று தொடர்புடையதாகும் என்றும், எனவே, ஒருங்கிணைந்த வளர்ச்சியை அடைவதற்கு முன்முயற்சியுடன் கூடிய ஒருங்கிணைந்த கொள்கைவழி அணுகுமுறை தேவைப்படுகிறது.
இந்நிலையில், முதற்கட்டமாக, வளர்ந்துவரும் தொழில்நுட்பப் பிரிவுக்கு தலைமை தாங்கும் வகையில் தலைமை தொழில்நுட்ப அதிகாரி பதவி தகவல் தொழில்நுட்பவியல் துறையில் ஏற்கெனவே உருவாக்கப்பட்டுள்ளது. வளர்ந்துவரும் மற்றும் ஆழ்நிலைத் தொழில்நுட்பங்களில் தொடக்கநிலைநிறுவனங்கள் மூலம், புதுமைகளை உருவாக்குவதற்கு ஏதுவாக, தமிழ்நாடு தொழில்நுட்ப மையம் (ITNT Hub) ஒன்று சென்னையில் அரசால் நிறுவப்பட்டு வருகிறதுஎனவே, மாநிலத்தில் தகவல் தொழில்நுட்பம், தகவல் தொழில்நுட்பம் சார்ந்த சேவைகள் மற்றும் டிஜிட்டல் தொழில்நுட்பச் சேவைகளின் வளர்ச்சியை வலுப்படுத்த இத்துறை, “தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை” என மறுபெயரிடப்படும், என்று அறிவிக்கப்பட்டு அதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *