• Sat. Apr 20th, 2024

திமுக ஆட்சி… பலருக்கு வயிற்றெரிச்சலாக இருக்கிறது – மு.க.ஸ்டாலின்

ப.திருமாவேலன் எழுதிய “இவர் தமிழர் இல்லை என்றால் எவர் தமிழர்?” என்ற நூல் வெளியீட்டு விழா சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் நடந்தது. இந்த விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு நூலை வெளியிட்டு பேசினார்.

அப்போது அவர் பேசுகையில், ” ‘திராவிட மரபினத்தைச் சேர்ந்தவன்’ என்று நான் சொல்வதைப் பார்த்து அவர்களுக்கு எல்லாம் கோபம் வருகிறது. ஏனென்றால், வெற்றி பெற்றவன் சொல்கிறானே என்பதால்தான். ஒரு காலத்தில் தோற்று ஓடியவர்களைத் திராவிடர்கள் என்றோமே, இன்று வெற்றி பெற்று நிற்கிறார்களே என்பதுதான் அவர்களது கோபத்துக்கு முக்கியமான காரணம்” என்றார்.

“கல்வி மறுக்கப்பட்ட இனத்துக்கு கல்வி கொடுத்ததும், பொருளாதார உரிமை பறிக்கப்பட்ட இனம் அனைத்துத் துறைகளிலும் மேன்மை அடைவதும், சமூகரீதியாக ஒடுக்கப்பட்ட மனிதர்கள் உயர்ந்து நிற்பதும்தான், தமிழ்ச் சமுதாயத்துக்கு கடந்த 100 ஆண்டுகளில் திராவிட இயக்கம் வழங்கி இருக்கக்கூடிய மாபெரும் கொடையாகும்.

திராவிட இயக்கத்தின் சமூகநீதிக் கொள்கையை, மாநில சுயாட்சி உரிமையை இன்று அகில இந்தியாவும் எதிரொலிக்க தொடங்கியிருக்கும் காலத்தில், தமிழ்நாட்டில் சிலர் திராவிட இயக்கத்தை வீழ்த்துவோம் என்று பிதற்றுவதைப் புறந்தள்ளத்தான் வேண்டும்.

‘இது பெரியார் மண்’ என்பதை நம்முடைய இனத்தை அழிக்கக்கூடிய அரசியல் எதிரிகளுக்கு திரும்பத் திரும்ப நினைவூட்டும் வகையில் நாம் செயல்பட்டுக் கொண்டே இருக்க வேண்டும். திராவிட இயக்கத்தை வீழ்த்த முடியாது என்பதாலும், பெரியாரின் பெரும்பணியை மறைக்க முடியாது என்பதாலும், நம் மீது அவதூறு சேற்றை வாரி இறைப்பதே எதிரிகளுக்கும் அவர்களின் கைக்கூலிகளுக்கும் முழுநேர வேலையாக இருக்கிறது.

அவதூறுச் சேற்றை ஆதாரங்கள் என்னும் தண்ணீர்ப் பாய்ச்சி மொத்தமாக துடைத்தெறிந்திருக்கின்ற நூல்தான் திருமாவேலன் அயராது உழைத்து உருவாக்கியுள்ள இந்த நூல் என்பதை மீண்டும் மீண்டும் நான் வலியுறுத்துகிறேன். தமிழின் ஆட்சியாக, தமிழ் இனத்தின் ஆட்சியாக திமுக ஆட்சி இருப்பதை பார்த்து பலருக்கும் வயிற்றெரிச்சலாக இருக்கிறது. எதையாவது சொல்லி நம்மை திசை திருப்புவார்கள். அர்த்தம் இல்லாத அவதூறுகளை அள்ளி வீசுவார்கள். அவை அனைத்தையும் தடுக்கின்ற கேடயத்தைத்தான் திருமாவேலன் தயாரித்திருக்கிறார். அதற்கான போர்வாளைத்தான் அவர் உருவாக்கியிருக்கிறார். அவர் தயாரித்துக் கொடுத்துள்ள இந்த அறிவாயுதத்தை அறிமுகம் செய்வதில் நான் அளவுகடந்த மகிழ்ச்சி அடைகிறேன், பெருமைப்படுகிறேன்.

‘பெரியார், தமிழர் இல்லை என்றால் எவர் தமிழர்’ என்று நூலாசிரியர் திருமாவேலன் எழுப்பியுள்ள அந்தக் கேள்வியை நானும் கேட்கிறேன், நான் அல்ல, நீங்களும் கேட்கவேண்டும். திராவிட இயக்கம்தான் தமிழர்களின் மகத்தான இயக்கம். இது தமிழர் இயக்கம் இல்லை என்றால் வேறு எது தமிழர் இயக்கம் என்று நான் கேட்க விரும்புகிறேன்” என்று பேசினார்.
மேலும், திமுக ஆட்சி காலத்தில் கொண்டுவரப்பட்ட முக்கிய திட்டங்கள் மற்றும், அறிவிப்புகள் குறித்து விளக்கமளித்தார். திமுக கடந்து வந்த பாதைகளைப் பற்றி எடுத்துரைத்தார். பல்வேறு முக்கிய சம்பவங்களை நினைவு கூர்ந்து பேசினார். அத்துடன், திராவிட இயக்க வரலாற்றை எடுத்துரைக்கும் வகையில், இதுபோன்று பல்வேறு நூல்கள் வெளிவர வேண்டும் என்றும் அப்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டுக்கொண்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *