திமுக அரசை கண்டித்து விருதுநகர் மேற்கு மாவட்ட அதிமுக சார்பாக முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி தலைமையில் விருதுநகரில் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெறுகின்றது.
மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மறுவாழ்வு உதவிகள் வழங்கவும், வெள்ளத்தால் பயிர்களை இழந்த விவசாயிகளுக்குப் போதுமான இழப்பீடு அளிக்கவும், பொங்கல் விழாவைக் கொண்டாட உதவும் வகையில் அனைவருக்கும் பொங்கல் பரிசுத் தொகை அளிக்கவும், அம்மா மினி கிளினிக்குகளை திமுக அரசு மூடுவதைக் கண்டித்தும், அரசின் அலட்சியத்தால் கடுமையாக உயர்ந்திருக்கும் அத்தியாவசியப் பொருள்களின் விலைவாசி உயர்வை எதிர்த்தும், தூய்மைப் பணியாளர்களுக்கு ஊக்கத் தொகை வழங்க வலியுறுத்தியும்,
அதிமுக சார்பில் தமிழகம் முழுவதிலும் மாவட்ட தலைநகரங்களில் டிசம்பர் 9ஆம் தேதி அதிமுக சார்பாக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும் எனஅதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் அறிவித்துள்ளனர். அதன்படி விருதுநகா மேற்கு மாவட்ட கழகம் சார்பாக விருதுநகரில் (9ம்தேதி) காலை 10 மணிக்கு ஆர்ப்பாட்டம் நடைபெறுகின்றது. விருதுநகர் இ.பி.ஆபிஸ். மாவட்ட மைய நூலகம் அருகில் விருதுநகர் மேற்கு மாவட்ட கழக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான கே.டி.ராஜேந்திரபாலாஜி தலைமையில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெறுகின்றது.
ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட கழக நிர்வாகிகள், மாவட்ட சார்பு அணி நிர்வாகிள், ஒன்றிய கழக நிர்வாகிகள், பேரூர் கழக நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள், கூட்டுறவு சங்க நிர்வாகிகள், அம்மா பேரவை, இளைஞரணி், இலக்கிய அணி, இளைஞர் இளம்பெண்கள் பாசறை, மகளிரணி், தொழில்நுட்ப பிரிவு அணி, விவசாய அணி மற்றும் கிளை கழக செயலாளர்கள், வார்டு கழக செயலாளர்கள் மற்றும் அனைத்து சார்பு அணியின் நிர்வாகிகள், தொண்டர்கள்,அண்ணா திமுகவின் போர்ப்படை தளபதிகள் அனைவரும் கைகளில் கழக கொடியேந்தி சாரை சாரையாக அணி வகுத்து ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும் என்று முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி கேட்டுக் கொண்டுள்ளார்.