
போதைப் பொருட்களை முற்றிலுமாக ஒழிக்க நடவடிக்கை எடுக்க கோரி பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் சென்னை கலெக்டர் அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டம் நடந்தது. டாக்டர் அன்புமணிராமதாஸ் பேசியதாவது:- போதைப் பொருட்களை முற்றிலுமாக ஒழிக்க வலியுறுத்தி பா.ம.க. சார்பில் இன்று தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டத் தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டு வருகிறது. போதைப் பொருள்களின் விற்பனையை தடுத்து நிறுத்த வேண்டும். எதிர்காலத் தமிழகத்தின் தூண்களான இளைஞர்கள் போதைக்கு அடிமையாகி சீரழிந்து வருகிறார்கள். பள்ளிக் கூட வாசல்களில், போதைப் பொருள்கள் கிடைக்கிறது. கைக்கு எட்டிய போதைப் பொருளால், மாணவச் சமூகம் அழிகிறது. போதைப் பழக்கக் கேட்டில் இருந்து தமிழக மக்களைக் காப்பாற்ற வேண்டும். மதுக்கடைகளால் தமிழ்நாடு சுடுகாடாக மாறுகிறது. 50 லட்சம் பேர் தமிழ் நாட்டில் போதைப் பொருள் பழக்கத்துக்கு அடிமையாகி வருகிறார்கள். போதை வணிகத்தைத் தடுக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
