• Tue. Apr 16th, 2024

தடுப்பணையில் 10,008 கார்த்திகை விளக்குகளை ஏற்றி கோரிக்கை…

Byகாயத்ரி

Nov 22, 2021

வெள்ளக்கோவில் அருகே 30 ஆண்டாக வறண்டு கிடக்கும் வட்டமலை தடுப்பணைக்கு பி.ஏ.பி திட்டத்தில் இருந்து தண்ணீர் திறக்க வேண்டி, 20க்கும் மேற்பட்ட கிராம மக்கள் மற்றும் விவசாயிகள் தடுப்பணையில் 10,008 கார்த்திகை விளக்குகளை ஏற்றினர்.

திருப்பூர் மாவட்டம் வெள்ளக்கோவில் அருகே உத்தமபாளையம் பகுதியில் வட்டமலை கரையை தடுத்து 700 ஏக்கர் பரப்பளவில் 40 ஆண்டுக்கு முன் தடுப்பணை கட்டப்பட்டது. இதன் மூலம், வெள்ளக்கோவில், புதுப்பை, தாசனாயக்கன்பட்டி, உத்தமபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள 6,050 ஏக்கர் பாசன நிலங்கள் பயன்பெறும்.

கடந்த 30 ஆண்டுகளாக அணைக்கு போதிய தண்ணீர் வராததால் அணை திறக்கப்படவில்லை. அமராவதி அணையின் உபரி நீரை இந்த அணைக்கு கொண்டு வர 20 கி.மீ. தூரம் கால்வாய் வெட்ட அரசாணை வெளியிடப்பட்டு ஆய்வு பணிகள் கூட தொடங்கப்படாமல் உள்ளது. இதன் காரணமாக, அணையை சுற்றி உள்ள 15க்கும் மேற்பட்ட கிராமங்களில் விவசாயம் பொய்த்து போனது. பி.ஏ.பி தொகுப்பணைகளில் உபரி நீர் வெளியேற்றப்பட்டு வரும் நிலையில் திருமூர்த்தி அணையின் மூலம் பி.ஏ.பி கால்வாயில் கள்ளிபாளையம் ரெகுலேட்டரில் இருந்து தண்ணீர் திறக்க வேண்டும் என விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

இரு முறை இப்பகுதி விவசாயிகள் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து மனு கொடுத்தும் எடுக்கவில்லை. இந்நிலையில், தற்போதைய அரசுக்கும் இது தொடர்பாக கோரிக்கை விடுத்து அண்மையில் மனு அளித்துள்ளனர். இதையடுத்து கார்த்திகை தீப திருநாளை முன்னிட்டு மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும், அரசின் கவனத்தை ஈர்க்கவும் நேற்று மாலை 5 மணியளவில் அணையின் பகுதியில் அப்பகுதி விவசாயிகள், பொதுமக்கள் 10 ஆயிரத்து 8 விளக்குகள் ஏற்றி வழிபட்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *