வங்கக்கடலில் நிலை கொண்ட ஆழ்ந்த காற்றழுத்தம் தீவிர புயலானது: வங்கதேசம் சிட்டகாங் அருகே 14ம் தேதி கரை கடக்கும்!..
வங்கக் கடலில் நிலை கொண்ட ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, நேற்று இரவு மேலும் வலுப்பெற்று, தீவிர புயலாக மாறியுள்ளது.இன்று இரவு அது மேலும் வலுப்பெற்று மிகத்தீவிரப்புயலாக மாறும். அது வங்கதேசம் சிட்டகாங் அருகே கரையை கடக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.வங்கக்கடலில் கடந்த வாரம் தென்கிழக்கு கடல் பகுதியில் உருவான காற்றழுத்தம் படிப்படியாக வலுப்பெற்று 9ம் தேதி தென்கிழக்கு வங்கக் கடல் மற்றும் அதை ஒட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதியில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுப்பெற்றது.
பின்னர் நேற்று காலையில் அது மேலும் வலுப்பெற்று வடமேற்கு திசையில் நகர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது. பின்னர், போர்ட்பிளேயரில் இருந்து 530 கிமீ தொலைவில் தென்மேற்கில் நிலை கொண்டு இருந்தது. தொடர்ந்து அது வட- வடமேற்கு திசையில் நகர்ந்து நேற்று மாலை புயலாக வலுப்பெற்றது.
இதன் காரணமாக தமிழ்நாட்டில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்தது. அதே நேரத்தில் மதுரை, சேலம், தஞ்சாவூர், திருப்பத்தூர், ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் இயல்பைவிட 4 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் உயர்ந்துள்ளது.
நீலகிரி, தர்மபுரி, திருவள்ளூர் மாவட்டங்களில் இயல்பைவிட 3 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் குறைந்துள்ளது.அதன் தொடர்ச்சியாக 10ம் தேதி முதல் 14ம் தேதி வரை தமிழ்நாடு புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் வெப்பநிலை 2 டிகிரி செல்சியஸ் முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கும்.
இந்நிலையில், வங்கக் கடலில் உருவான புயல் மேலும் வலுப்பெற்று இன்று காலை தீவிர புயலாக மாறும், பின்னர் இன்று இரவு அந்த தீவிரப் புயல் மேலும் வலுப்பெற்று மிகத் தீவிரப் புயலாக மாறி தென் கிழக்கு வங்கக் கடல் பகுதியில் நிலை கொள்ளும். பின்னர் அது வடக்கு- வடகிழக்கு திசையில் திரும்பி மெல்ல நகர்ந்து 13ம் தேதி முதல் சற்று வலுக்குறைந்து 14ம் தேதி அன்று மாலை 7 மணி அளவில் வங்கதேசம் சிட்டகாங் அருகே கரையைக் கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிகழ்வின் காரணமாக இன்று காலை முதல் வங்கக் கடலில் மணிக்கு 70 கிமீ வேகம் முதல், 80 கிமீ வேகத்திலும், இன்று மாலை முதல் மணிக்கு 100 கிமீ வேகத்திலும் இடையிடையே 120 கிமீ வேகத்திலும் காற்று வீசும். 12ம் தேதி மாலை முதல் மணிக்கு 140 கிமீ வேகத்தில் காற்று வீசும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், முன்னதாக கடலுக்கு சென்றவர்கள் உடனடியாக கரை திரும்ப வேண்டும். ..வங்கக் கடலில் புயல் உருவாகியுள்ளதை அடுத்து தமிழக கடலோரப் பகுதியில் உள்ள அனைத்து துறைமுகங்களிலும் புயல் எச்சரிக்கை கூண்டு1, 2, 3 எண் ஏற்றப்பட்டுள்ளன. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.