தமிழக சட்டப்பேரவை கூட்டம் இரண்டு நாட்கள் விடுமுறைக்கு பிறகு இன்று மீண்டும் கூடுகிறது. இதில் நீர்வளத்துறை மானியக்கோரிக்கையின் மீதான விவாதம் நடைபெறுகிறது.
தமிழக அரசின் 2025-26-ம் ஆண்டுக்கான நிதி நிலை அறிக்கையை கடந்த 14-ம் தேதி சட்டப்பேரவையில் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார். மறுநாள் ( மார்ச் 15) வேளாண்மை நிதி நிலை அறிக்கையை வேளாண்மை துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் தாக்கல் செய்தார். தொடர்ந்து கடந்த 17-ம் தேதி முதல் நிதிநிலை அறிக்கையின் மீது பொது விவாதம் நடந்தது. விவாதத்தில் சட்டப்பேரவை உறுப்பினர்கள் பேசினர்.
அதனைத்தொடர்ந்து சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை சட்டசபைக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. இதற்கிடையே சட்டசபையில் இன்று முதல் (மார்ச் 24) துறைவாரியாக மானியக்கோரிக்கை மீதான விவாதம் நடைபெற உள்ளது. முதல் நாளான இன்று நீர்வளத்துறை மானியக்கோரிக்கை மீதான விவாதம் நடக்கிறது. விவாதத்தில் உறுப்பினர்கள் பேசுவர். தொடர்ந்து உறுப்பினர்களின் விவாதத்திற்கு பதிலளித்து நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பேசி, புதிய அறிவிப்புகளை வெளியிடுவார்.
அதில் பல்வேறு முக்கிய அறிவிப்புகள் வெளியாக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. தொடர்ந்து மார்ச் 25-ம் தேதி நகராட்சி நிர்வாகம் மானியக்கோரிக்கை விவாதம் நடக்கிறது. இரண்டு நாட்கள் விடுமுறைக்கு பிறகு மீண்டும் இன்று கூடும் சட்டப்பேரவை கூட்டம் ஏப்ரல் 30-ம் தேதி வரை நடைபெறுகிறது.