• Wed. Apr 24th, 2024

புதிய சிக்கலில் ‘எதற்கும் துணிந்தவன்’ படம்!

சூர்யா நடிப்பில் நேற்று வெளியான எதற்கும் துணிந்தவன் படத்தில் முருகக் கடவுளை இழிவுபடுத்தும் வகையில் வார்த்தைகள் அமைந்துள்ள பாடலை நீக்க வேண்டும் என அகில இந்திய நேதாஜி கட்சி தெரிவித்துள்ளது.

இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடித்து நேற்று வெளியான படம் எதற்கும் துணிந்தவன். இந்த திரைப்படத்தில் பாடல் ஆசிரியர் யுகபாரதி உள்ளம் உருகுதய்யா என்ற பாடலை எழுதியுள்ளார். இந்த பாடலில் இடம்பெற்றுள்ள வரிகள் தமிழ் கடவுள் முருகனை இழிவுபடுத்தும் வகையில் அமைந்துள்ளதாகவும், இப்பாடலை படத்தில் இருந்து நீக்க கோரியும் அகில இந்திய நேதாஜி கட்சியினர் கோவை மாநகர காவல் ஆணையத்தில் புகார் அளித்தனர்.

இதுகுறித்து, அகில இந்திய நேதாஜி கட்சியின் நிறுவனர் ராகுல் காந்தி செய்தியாளர்களுக்கு அளித்துள்ள பேட்டியில், ‘எதற்கும் துணிந்தவன்’ படத்தில் வரும் உள்ளம் உருகுதய்யா பாடல் வெளியாகி பல நாட்கள் ஆகிவிட்ட போதும், இன்று (நேற்று) படம் வெளியான பிறகு தான் அதில், முருகனை இழிவுபடுத்தும் காட்சிகள் அமைந்திருப்பது தெரியவந்துள்ளது.

இப்பாட்டில் தமிழ் மொழியும், தமிழ் கடவுள் முருகரையும் இழிவு செய்திருக்கிறார்கள். ஆபாசமான வார்த்தைகளை அந்த பாடலில் பயன்படுத்தியுள்ளனர். இதுபோன்ற செயல் தொடர்ந்து தமிழ் சினிமாவில் நடந்து வருகிறது. எனவே இந்த பாடலை உடனடியாக படத்திலிருந்து நீக்க வேண்டும்.

மேலும் இந்த படத்தில் நடித்த சூர்யா, இயக்குனர் பாண்டியராஜன், இசையமைப்பாளர் டி இமான், தமிழ் கடவுள் முருகனை இழிவுபடுத்தும் வகையில் வார்த்தைகளை அமைத்த பாடலாசிரியர் யுகபாரதி ஆகியோர் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *