


ஒரு மணி நேரம் தொடர்ந்து சைக்கிள் ஓட்டி கொண்டு சிலம்பம் சுழற்றி உலக சாதனை செய்து, மூன்று வயது குழந்தைகள் துவங்கி பள்ளி மாணவர்கள் கோவையில் அசத்தி உள்ளனர்.
கோவையில் ஒரு மணி நேரம் தொடர்ந்து சைக்கிள் ஓட்டிய படி சிலம்பம் சுழற்றி 73 பள்ளி மாணவர்கள் உலக சாதனை செய்தனர்.

கோவையில் தமிழர் பாரம்பரிய கலைகளை உலக அளவில் கொண்டு சேர்க்கும் விதமாக சைக்கிள் ஒட்டி கொண்டு ஒற்றை சிலம்பத்தை தொடர்ந்து ஒரு மணி நேரம் சுற்றும் உலக சாதனை நிகழ்ச்சி சின்னவேடம்பட்டி பகுதியில் உள்ள கவுமார மடாலய வளாகத்தில் நடைபெற்றது. இதில் அதே பகுதியை சேர்ந்த வி.ஆர். சிலம்பம் ஸ்போர்ட்ஸ் அகாடமியைச் சேர்ந்த 3 வயது முதலான பள்ளி மாணவர்கள் 73 பேர் பங்கேற்றனர்.

மைதானத்தில் வரையப்பட்ட கோட்டின் நடுவே ஒரு கையில் சைக்கிளை பிடித்தவாறு ஒரு கையில் சிலம்பத்தை சுழற்றியபடி சைக்கிளை மாணவர்கள் ஓட்டினர். தொடர்ந்து ஒரு மணி நேரம் நடைபெற்ற இந்நிகழ்வு நோபல் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தது.
தொடர்ந்து ஒரு மணி நேரம் இடைவிடாது சைக்கிள் ஓட்டிக்கொண்டே இரு கைகளிலும் மாற்றி மாற்றி சிலம்பம் சுழற்றிய மாணவர்களை கூடியிருந்த பெற்றோர்கள் மாணவர்களை கைகளை தட்டி உற்சாகப்படுத்தினர்.

தொடர்ந்து உலக சாதனை செய்த மாணவ,மாணவிகளுக்கு திரைப்பட சண்டை பயிற்சி இயக்குனர் கிராண்ட் மாஸ்டர் பவர். எஸ். பாண்டியன் ஆசான் மற்றும் வி.ஆர்.சிலம்பம் ஸ்போர்ட்ஸ் அகாடமி பயிற்சியாளர் திலீப் குமார் ஆகியோர் சான்றிதழ் மற்றும் பதக்கங்களை வழங்கி கவுரவித்தனர்.

இதுவரையில், சிலம்பக் கலைக்கான தேசிய அங்கீகாரம் கிடைக்காத நிலையில், இத்தகைய உலக சாதனை நிகழ்வுகள் சிலம்பக்கலைக்கு தேசிய அங்கீகாரம் பெற்றுத்தர உதவும் என பவர் பாண்டியன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.


