• Sat. Apr 20th, 2024

புடினை ஹிட்லரோடு ஒப்பிட்டு கவர் படம் ? உண்மை பின்னணி என்ன?

அமெரிக்காவில் இருந்து வெளிவரும் பிரபல பத்திரிகை ‘டைம்’ கவர் பேஜில் ரஷ்ய அதிபர் விலாடிமிர் புதினின் முகத்தில் ஹிட்லரின் மீசை, கண்களை இணைத்து வெளியிடப்பட்டுள்ளதாக சமூக வலைதளங்களில் படங்கள் பரவுகிறது.

இது உண்மையா, பொய்யா என்ற முழுபின்னணி விபரம் தற்போது தெரியவந்துள்ளது.

உக்ரைன் மீது ரஷ்ய அதிபர் விலாடிமிர் புதின் பிப்ரவரி 24 முதல் ராணுவ நடவடிக்கையை துவக்கினார். இன்று 6வது நாளாக ரஷ்ய ராணுவம் உக்ரைனை உக்கிரமாக தாக்கி வருகிறது.

இந்தியா, அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகள் கேட்டு கொண்டாலும் புதின் போரை கைவிடவில்லை. இதனால் இருதரப்புக்கும் உயிரிழப்புகள் ஏற்பட்டு வருகின்றன. போர் தொடர்பாக ரஷ்யா-உக்ரைன் இடையே பொலாரஸில் பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளது. இந்த பேச்சுவார்த்தையை தொடர்ந்து போர் முடிவுக்கு வரும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் தான் உக்ரைன் மீது போர் தொடுத்துள்ள ரஷ்ய அதிபர் விலாடிமிர் புதினை, ஜெர்மனியின் ஹிட்லருடன் ஒப்பிடும்படியான 2 படங்கள் டைம் பத்திரிகையின் கவர்பேஜில் வெளியிடப்படுகிறது என சமூக வலைதளங்களில் பரவியது. இதில் ஒரு படம் பிப்ரவரி 28 (நேற்று), இன்னொரு படம் மார்ச் 7 ல் வெளியாக உள்ளதாகவும் கூறப்பட்டது. இதில் ஒன்றில் புதின் முகத்தில் ஹிட்லரின் மீசையும், இன்னொரு படத்தின் புதினின் கண்களுக்கு பதில் ஹிட்லரின் கண்களும் உள்ளது. இது வேகமாக பரவிய நிலையில் விவாதப்பொருளானது.

மேலும் டைம் பத்திரிகை அப்படி கவர்பேஜ் போட்டோவை வெளியிடவில்லை என்பது தெரியவந்தது. அதாவது டைம் பத்திரிகை தனது அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் பிப்ரவரி 25 காலை 6.18 மணிக்கு ஒரு பதிவு செய்தது. அதில் பீரங்கி வண்டிகளில் ராணுவ வீரர்கள் இருக்க ‘வரலாறு திரும்புகிறது… ஐரோப்பாவின் கனவுகளை புதின் சிதைத்து எப்படி’ என ஆங்கிலத்தில் எழுதப்பட்டு இருந்தது. இதை போட்டோஷாப்பில் எடிட் செய்தவர்கள், பீரங்கியுடன் ராணுவ வீரர்கள் இருப்பதற்கு பதில் புதினை ஹிட்லருடன் சேர்த்து சமூக வலைதளங்களில் பரப்பியது தெரியவந்துள்ளது.

இதையடுத்து ஏராளமானவர்கள் அதை உண்மை என நினைத்து சமூக வலைதளங்களில் பரப்பியதும், தொடர்ந்து கமெண்ட் செய்து பரபரப்பை ஏற்படுத்தினர். இதில் வரலாறு திரும்புகிறது… பேசினால் மட்டும் போதாது செய்து காட்ட வேண்டும் என ஒவ்வொருவரும் தங்களது மனதில் உள்ள எண்ணங்களை கமெண்ட்டுகளில் கொட்டி தீர்க்கின்றனர். முன்னதாக, ரஷ்ய அதிபர் விலாடிமிர் புதினை, ஹிட்லரின் நாஜி படையுடன் ஒப்பிட்டு உக்ரைன் அதிபர் விலாடிமிர் ஜெலன்ஸ்கி பேசியிருந்ததார். அதாவது, ‘ரஷ்யா நாசி படையை போன்று உக்ரைனை தாக்குகிறது’ என கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் இது போல இந்தியாவில் கொரோனாவால் இறந்தவர்கள் குறித்து நாட்டு மக்களிடம் பிரதமர் மோடி உரையாடிக்கொண்டிருந்த போது குரல் தழுதழுத்து அழுத காட்சி இணையத்தில் வைரலானது. இதனை தொடர்ந்து பலரும் முதலை கண்ணீர் என்று விமர்சனம் செய்தனர். அதே போல அமெரிக்காவின் பிரபல நாளிதழான நியூயார்க் டைம்ஸ் பத்திரிகையில் முதலை கண்ணீர் வடிக்கும் இந்திய பிரதமர் என்று செய்தி வந்ததாக பலராலும் பகிரப்பட்டது. பிறகு அதனை ஆய்வு செய்ததில் அது போன்ற செய்தியை புகைப்படத்தை நியூயார்க் டைம்ஸ் நாளிதழ் வெளியிட வில்லை என்று தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *