• Sat. Dec 20th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

சட்டப்படி நடத்தப்படும் போராட்டங்களில் காவல்துறை அத்துமீறினால் நீதிமன்றம் தலையிடும்

Byவிஷா

Feb 17, 2024

சட்டப்படி நடத்தப்படும் ஆர்ப்பாட்டம், போராட்டங்களில் காவல்துறை அத்துமீறினால், நீதிமன்றம் தலையிடும் என சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு எச்சரிக்கை விடுத்துள்ளது.
மாற்றுத் திறனாளிகளுக்கான 4 சதவீத இடஒதுக்கீட்டில் பார்வையற்ற, பார்வை குறைபாடு உடைய மாற்றுத் திறனாளிகளுக்கு ஒரு சதவீத உள்ஒதுக்கீடு வழங்கும் அரசாணையை அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட 8 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பார்வையற்ற மாற்றுத் திறனாளிகள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
சென்னையில் உரிய அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபடுவதாகக் கூறி, பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளைக் கைது செய்த போலீஸார், அவர்களை வெளியூர் பேருந்துகளில் ஏற்றி அனுப்பி வைத்து அலைக்கழித்ததாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இந்நிலையில் பார்வையற்ற மாற்றுத் திறனாளிகள் அமைதியான முறையில் போராட்டம் நடத்த அனுமதி வழங்கக் கோரி, கல்லூரி மாணவர்கள் மற்றும் பட்டதாரிகள் சங்கத்தின் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கு தலைமை நீதிபதிஎஸ்.வி.கங்காபுர்வாலா மற்றும் நீதிபதி டி.பரத சக்ரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், போராட்டம் மற்றும் ஆர்ப்பாட்டம் நடத்துவது என்பது சட்டப்பூர்வமான உரிமைதான் என்றாலும் அவை சட்டப்பூர்வமாக நடத்தப்பட வேண்டும். இந்த ஆர்ப்பாட்டத்துக்கு முன்கூட்டியே போலீஸாரிடம் அனுமதி கோரப்பட்டதா? போலீஸார் அனுமதி மறுத்துள்ளனரா? என கேள்வி எழுப்பினர்.
மேலும், திடீரென சாலையை மறித்து யாரும் நடுரோட்டில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபடமுடியாது. ஆர்ப்பாட்டம், போராட்டம் நடத்துவதற்கென அனுமதிக்கப்பட்ட இடங்களில் போலீஸாரின் அனுமதி பெற்று அதன்பிறகே தங்களது கோரிக்கைகளை வலியுறுத்த முடியும். ஒருவேளை போலீஸார் அனுமதி மறுத்தால் அதை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து பரிகாரம் தேடலாம்.
அதேநேரம், சட்டப்படி நடத்தப்படும் ஆர்ப்பாட்டம், போராட்டங்களில் காவல்துறை அத்துமீறினால் அதில் நீதிமன்றம் தலையிடும். இந்த வழக்கில் மனுதாரர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட அனுமதி வழங்கும்படி போலீஸாரை நாடலாம், எனக் கூறி வழக்கை முடித்து வைத்துள்ளனர்.