பிறப்பின் அடிப்படையில் குடியுரிமை என்கிற அமெரிக்க அதிபர் டிரம்பின் உத்தரவு மீதான விசாரணையை உச்சநீதிமன்றம் நிறுத்தி வைத்துள்ளது.
அமெரிக்க குடியுரிமை பெறாத பெற்றோருக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு வழங்கப்பட்டு வந்த பிறப்பின் அடிப்படையிலான குடியுரிமையை ரத்து செய்து கடந்த ஜனவரி 20ம் தேதி அதிபர் டொனால்டு ட்ரம்ப் உத்தரவிட்டார். “அமெரிக்காவில் பிறக்கும் குழந்தையின் பெற்றோரில் யாரேனும் ஒருவர் நிரந்தர அமெரிக்க குடியுரிமை பெற்றிருந்தால் மட்டுமே அந்தக் குழந்தைக்கு அமெரிக்க குடியுரிமை வழங்கப்படும் என்றும் கூறியிருந்தார்.
இந்தநிலையில், அமெரிக்காவில் பிறப்பின் அடிப்படையிலான குடியுரிமையை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்த அதிபர் டிரம்பின் உத்தரவு பல்வேறு சட்ட சிக்கல்களை ஏற்படுத்தியுள்ளது. அதோடு, புலம்பெயர் குடும்பங்கள் நிச்சயமற்ற சூழலுக்குத் தள்ளப்பட்டுள்ளனர். ஏறக்குறைய 160 ஆண்டுகளாக நடைமுறையில் உள்ள அமெரிக்க அரசியலமைப்பு சட்டத்தின் 14வது திருத்தம், அமெரிக்காவில் பிறக்கும் எந்தவொரு குழந்தைக்கும் இயல்பாகவே அமெரிக்க குடியுரிமை கிடைப்பதை உறுதி செய்கிறது.
ஆனால், அதிபர் டிரம்பின் உத்தரவு, இந்த 14வது சட்டத் திருத்தத்திற்கு மறுவிளக்கம் அளித்து, சட்டவிரோதமாக அல்லது தற்காலிக விசாவில் அமெரிக்காவில் வாழும் புலம்பெயர்ந்தோரின் குழந்தைகளுக்குக் கிடைக்கும் அமெரிக்கக் குடியுரிமைக்கு பாதிப்பு ஏற்படுத்துகிறது. இந்த புதிய கொள்கை 19 பிப்ரவரி 2025 அன்று அல்லது அதற்குப் பிறகு பிறந்த குழந்தைகளுக்கு மட்டுமே பொருந்தும். அதேபோல், இந்தத் தேதிக்கு முன் பிறக்கும் குழந்தைகளுக்கு இதனால் எந்த பாதிப்புமில்லை என்று கூறப்பட்டது. ஆனால் இதனை எதிர்த்து அமெரிக்காவின் பல்வேறு மாகாணங்களில் வழக்கு தொடரப்பட்டது.
அமெரிக்காவில் பிறக்கும் குழந்தைகளின் குடியுரிமையைப் பறிக்கும் டிரம்பின் உத்தரவைத் தடுத்து நிறுத்துவதற்கு மூன்று நீதிபதிகள் தனித்தனி தீர்ப்புகளில் தடை உத்தரவுகளைப் பிறப்பித்தனர். இந்த உத்தரவு, அமெரிக்காவில் பிறந்த கிட்டத்தட்ட அனைவருக்கும் குடியுரிமை உரிமையை நீண்ட காலமாக வழங்கி வரும் 14வது திருத்தத்தை நேரடியாக மீறுவதாகும் என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.
கடந்த மாதம், டிரம்ப் நிர்வாகம் உச்ச நீதிமன்றத்தில் அவசர மேல்முறையீடு ஒன்றை தாக்கல் செய்தது. நாடு முழுவதும் எந்தவொரு கொள்கையையும் நிறுத்தக்கூடிய இவ்வளவு பெரிய முடிவை எடுக்கும் அதிகாரம் கீழ் நீதிமன்றங்களின் நீதிபதிகளுக்கு இருக்கக்கூடாது என்று அரசாங்கம் கூறியது.
இந்த நிலையில் இதுதொடர்பான வழக்கை மே 15 ஆம் தேதி விசாரிப்பதாக அமெரிக்க உச்ச நீதிமன்றம் வியாழக்கிழமை தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் பொருந்தக்கூடிய உத்தரவுகளை வழங்க மாவட்ட நீதிபதிகளுக்கு உரிமை உள்ளதா இல்லையா என்பது குறித்து இந்த விசாரணை இருக்கும். அவசர மேல்முறையீடுகள் மீதான வாதங்களை நீதிமன்றம் திட்டமிடுவது அரிது. இது டிரம்ப் நிர்வாகத்தின் கருத்தை நீதிமன்றம் தீவிரமாக எடுத்துக்கொள்வதைக் காட்டுகிறது.
டிரம்பின் உத்தரவு மீதான விசாரணையை நிறுத்தி வைத்த நீதிமன்றம்
