• Tue. Apr 16th, 2024

அரசு பள்ளியில் நடந்த நாட்டு நலப்பணி முகாம்

அரசு பள்ளியில் நடந்த நாட்டு நலப்பணி திட்ட முகாமில் மாணவர்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இம்முகாமில் கலந்து கொண்டவர்கள் மாணவர்களுக்கு மரம் வளர்ப்பதன் அவசியம் பற்றி எடுத்துக் கூறினார்கள்.

புதுக்கோட்டை மாவட்டம் வல்லத்திரவாக்கோட்டையில் இயங்கிவரும் அரசு மேல்நிலைப் பள்ளியில் கடந்த ஏழு நாட்களாக இப்பள்ளியின் நாட்டு நலத்திட்ட மாணவர்களால் அருகில் உள்ள கிராமங்களில் சுத்தப்படுத்துதல் மற்றும் கோவில்களில் உழவாரப்பணி உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றது. பள்ளி வயதிலேயே மாணவர்களுக்கு சமூக அக்கறை வரவேண்டும் என்பதற்காக ஒவ்வொரு பள்ளியிலும் ரெட்கிராஸ், ஸ்கவுட் மற்றும் நாட்டு நலப்பணி திட்டம் எனப்படும் என்.எஸ்.எஸ். என பல்வேறு அமைப்புகள் இயங்கிவருகின்றது.

இவ் அமைப்புகளைப் பொறுத்தவரை மாணவர்கள் தங்கள் எதிர்காலத்தில் இச்சமூகத்திற்கு ஆற்றவேண்டிய கடமைகள் என்னவென்பதை தாங்கள் இளம் பள்ளி பருவத்திலேயே தெறிந்து கொள்ளவேண்டும். அவ்வாறு பள்ளி, கல்லூரிகளில் செய்த மக்கள் பணிகளை எதிர்காலத்திலும் தொடர்ந்து செய்யவேண்டும் என்பதை பழக்கப்படுத்துவதற்காக ஏற்படுத்தப்பட்டதுதான் மேற்கண்ட சேவை அமைப்புகள் ஆகும். இவை பெரும்பாலான அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் செயல்படுத்தப்படுவதே இல்லை என்பது தெரிந்த விசயம் என்றாலும், ஆங்காங்கே ஒரு சில பள்ளிகளில் முறையாக செயல்படுத்தப்படுவது சற்று ஆறுதல் அழிக்கிறது.

அந்த வகையில் வல்லத்திராகோட்டை பள்ளியில் நடந்து வந்த முகாமின் நிறைவு நாளன்று சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட கல்வித்துறையின் மாவட்ட சுற்றுச்சூழல் மற்றும் மாசுகட்டுப்பாட்டு அலுவலர் சாலை செந்தில், பள்ளி மாணவர்களிடையே சுற்றுச்சூழல் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தியதோடு மரம் வளர்ப்பதன் அவசியம் பற்றி எடுத்துக்கூறினார். இறுதியில் பள்ளி வளாகத்தைச் சுற்றி மரக்கன்றுகள் நடப்பட்டன. மேலும் மாணவர்கள் அனைவருக்கும் மரக்கன்றுகள் வழங்கப்பட்டது. கடந்த ஏழு நாட்களாக 25 மாணவர்களின் பங்களிப்போடு நடைபெற்ற இவ்விழாவை தலைமை ஆசிரியர் குமாரின் வழிகாட்டுதலோடு என்.எஸ்.எஸ் திட்ட அலுவலர்களான குணசேகரன் மற்றும் ஆண்டனி ஆகியோர் மிகச்சிறப்பாக செய்திருந்தார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *