நாளை மக்களவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெறுவதால், தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக அரசு அறிவித்துள்ளது.
இந்தியா முழுவதும் மக்களவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் நாளை எண்ணப்படுகின்றன. அந்த வகையில் தமிழகம் முழுவதும் நாளை 39 மையங்களில் எண்ணப்படுகிறது. தமிழ்நாட்டில் 39 தொகுதிகள் மற்றும் புதுச்சேரியில் ஒரு தொகுதி என 40 தொகுதிகளில் கடந்த ஏப்ரல் 19ம் தேதி முதல் கட்டமாக தேர்தல் நடத்தப்பட்டது. இதில் தி.மு.க., அ.தி.மு.க., பா.ஜனதா கட்சிகள் கூட்டணியிலும், நாம் தமிழர் கட்சி தனித்தும் போட்டியிட்டன. தமிழகம் முழுவதும் மொத்தம் 950 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.
நாளை இந்த தேர்தலில் பதிவான ஓட்டுகள் எண்ணப்படுகின்றன. இதனையடுத்து நாடு முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்படுகிறது. தமிழகத்தில் ஒரு லட்சம் போலீசார் பாதுகாப்பு, கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இந்நிலையில் அசம்பாவித சம்பவங்கள் நிகழாமல் தடுக்கும் வகையில், தமிழகத்தில் நாளை ‘டாஸ்மாக்’ கடைகள் மூடப்படுகிறது. ‘டாஸ்மாக்’ கடைகளுக்கான இந்த விடுமுறை அறிவிப்பை அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் ஏற்கனவே வெளியிட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. நாளை மதுவிற்பனை செய்வதும், வேறு இடங்களுக்கு மதுவை கொண்டு செல்வதை தவிர்க்க வேண்டும் மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும் என அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர்.
நாளை வாக்கு எண்ணிக்கை: தமிழகம் முழுவதும் டாஸ்மாக் விடுமுறை
