

அமெரிக்காவில் 5 வயதுக்கு உட்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்த பைசர் நிறுவனம் அனுமதி கோரியுள்ளது. உலகம் முழுவதும் கொரோனா வைரசை கட்டுப்படுத்துவதற்காக மக்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. ஒருசில தடுப்பு மருந்துகளை தவிர பெரும்பாலான தடுப்பு மருந்துகள் இரண்டு டோஸ்களாக, குறிப்பிட்ட கால இடைவெளியில் செலுத்தப்பட்டு வருகின்றன. இதனிடையே, கொரோனா வைரஸ் மரபணு மாற்றம் அடைந்து உருமாறி வருவதால், அதன் பாதிப்புகளை குறைக்க இந்தியா, அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளில் பூஸ்டர் டோஸ் தடுப்பூசிகளும் செலுத்தப்பட்டு வருகிறது.
அமெரிக்காவின் பைசர் நிறுவனம், கடந்த ஆண்டு 5 – 11 வயதுள்ள குழந்தைகளுக்கான தடுப்பூசி தயாரிக்கும் பரிசோதனையை நடத்தி வந்தது. இந்த பரிசோதனை வெற்றிகரமாக அமைந்துள்ளதாக பைசர் நிறுவனத்தின் துணைத் தலைவரும், பிரபல குழந்தை மருத்துவ நிபுணருமான டாக்டர் பில் க்ருபர் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில், பைசர் தடுப்பூசியை 5 முதல் 11 வயதுக்கு உட்பட்டோருக்கு இரண்டு டோஸ்களாக செலுத்த நியூசிலாந்து அரசு தற்காலிக ஒப்புதல் அளித்திருந்தது. அதன்படி, குழந்தைகளுக்கான பைசர் தடுப்பூசி செலுத்தும் பணிகள் 2022 ஜனவரி இறுதிக்குள் நியூசிலாந்தில் தொடங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், தற்போது அமெரிக்காவில் 5 வயதுக்கு உட்பட்டோருக்கான தடுப்பூசியை செலுத்தும் திட்டத்திற்கு பைசர் நிறுவனம் தயாராகியுள்ளது. இந்த தடுப்பூசியை மக்களுக்கு செலுத்துவதற்கு அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிறுவனத்திடம் பைசர் நிறுவனம் அனுமதி கோரியுள்ளது.