

மணக்க மணக்க வெண்டைக்காய் சாதம் செய்முறை:
முதலில் 1/4 கிலோ வெண்டைக்காய்களை எடுத்து தண்ணீரில் நன்றாக கழுவி ஒரு காட்டன் துணியில் தண்ணீர் இல்லாமல் துடைத்து விட்டு, காம்புகளை நறுக்கிவிட்டு பொரியலுக்கு நறுக்குவது போல மெல்லிசாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
அடுத்தபடியாக ஒரு மிக்ஸி ஜாரை எடுத்து அதில் வரமிளகாய் 4, தோல் உரித்த பூண்டு பல் 6, போட்டு கொரகொரப்பாக ஒரு ஓட்டு ஓட்டி அதையும் தனியாக வைத்துக் கொள்ளுங்கள். அடுத்து வடித்த சாதம் உதிரி உதிரியாக (பாசுமதி அரிசி, பச்சரிசி, சாப்பாட்டு அரிசி) எடுத்து வைத்துக் கொள்ளவும்.
அடுப்பில் ஒரு கடாயை வைத்து எண்ணெய் 2 ஸ்பூன் ஊற்றி, கடுகு 1/2 ஸ்பூன், கடலைப்பருப்பு 1 ஸ்பூன், உளுந்து 1 ஸ்பூன், வேர்கடலை 1 டேபிள் ஸ்பூன், முந்திரி பருப்பு 5, இந்த பொருட்களை எல்லாம் போட்டு வாசம் வரும் வரை வறுக்கவும். பிறகு பொடியாக நறுக்கிய வெங்காயம் 1 போட்டு, கண்ணாடி பதம் வரும் வரை வதக்குங்கள். பிறகு நறுக்கிய வெண்டைக்காய்களை போட்டு கொழகொழப்பு போகும் வரை வதக்க வேண்டும். கொழகொழப்போடு இருந்தால் வெண்டைக்காய் சாதம் நன்றாக இருக்காது. வெங்காயத்தோடு எண்ணெயிலேயே வெண்டைக்காய் நன்றாக வதங்கட்டும். எண்ணெய் கொஞ்சம் கூடுதலாகவே ஊற்றிக் கொள்ளுங்கள்.
வெண்டைக்காய் வெந்து வதங்கி வந்தவுடன், மிக்ஸி ஜாரில் அரைத்து வைத்திருக்கும் மசாலா விழுதை இதில் போடவும். பிறகு மல்லிதூள் 1/2 ஸ்பூன், கரம் மசாலா 1/4 ஸ்பூன், சாதத்திற்கும் மசாலாவுக்கும் தேவையான அளவு உப்பு தூள், தூவி பெருங்காயத்தூள் – 1/4 ஸ்பூன் போட்டு எல்லாவற்றையும் நன்றாக கலந்து விடுங்கள்.
இறுதியாக உதிரி உதிரியாக வடித்து வைத்திருக்கும் சாதத்தை இதில் போட்டு பக்குவமாக கிளறி, கொத்தமல்லி தழைகளை தூவி, சுட சுட பரிமாறவும். தொட்டுக்கொள்ள ஒரு வத்தல் இருந்தாலே போதும்.
