• Fri. Jan 24th, 2025

கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பட்டமளிப்பு விழா

BySeenu

Dec 31, 2024

சுகுணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக துணைவேந்தர் கீதாலட்சுமி கலந்து கொண்டு மாணவ, மாணவிகளுக்கு பட்டங்கள் வழங்கினார்.

கோவை காளப்பட்டி நேரு நகரில் உள்ள சுகுணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் முதல் பட்டமளிப்பு விழா, காளப்பட்டி நேரு நகரில் உள்ள சுகுணா ஆடிட்டோரியத்தில் நடைபெற்றது.

சுகுணா நிறுவனங்களின் தலைவர் லட்சுமி நாராயணசாமி, தாளாளர் சுகுணா லட்சுமி நாராயணசாமி ஆகியோர் தலைமையில் நடைபெற்ற இதில், கல்லூரியின் முதல்வர் டாக்டர் ராஜ்குமார் வரவேற்புரை வழங்கினார்.

நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் கீதாலட்சுமி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

அப்போது பேசிய அவர்,இந்தியா சுதந்திரம் பெற்ற போது நாடு முழுவதும் 20 பல்கலைகழகங்கள் மற்றும் 496 கல்லூரிகள் மட்டுமே இருந்ததாக கூறிய அவர்,1948 ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட யூ.ஜி.சி.ஆணையத்திற்கு பிறகு தற்போது ஆயிரத்திற்கும் மேற்பட்ட பல்கலைகழகங்கள் நாடு முழுவதும் செயல்பட்டு வருவதாக பெருமிதம் தெரிவித்தார்.

கல்வியறிவு பெற்றவர்கள் விகிதத்தின் தமிழகம் முன்னனி மாநிலமாக இருப்பதை சுட்டி காட்டிய அவர், வாழ்வில் அனைத்து நிலைகளிலும் முன்னேற்றம் பெற கல்வி கற்பது அவசியம் என்றார்.

தொடர்ந்து அவர்,மத்திய மற்றும் மாநில அரசுகள் கல்வி கற்பதை ஊக்குவிக்கும் விதமாக மாணவ,மாணவிகளுக்கென செயல்படுத்தி வரும் பல்வேறு திட்டங்கள் குறித்து எடுத்து கூறினார்.

தொடர்ந்து விழாவில் முக்கிய விருந்தினர்கள், இளம் பட்டதாரிகளுக்கு பட்டங்களை வழங்கிச் சிறப்பித்தனர். விழாவில் சுகுணா அறக்கட்டளையின் செயலர் டாக்டர் ஸ்ரீகாந்த் கண்ணன், கல்லூரியின் இயக்குனர் மற்றும் செயலர் டாக்டர் சேகர் உட்பட கல்லூரியின் துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள் பெற்றோர்கள் என பலர் கலந்து கொண்டனர்.