
உசிலம்பட்டி நகர் பகுதி மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரங்களில் ஒன்றாக விளங்கும் இந்த கண்மாயை நவீன படுத்த தொடர் கோரிக்கை எழுந்து வந்தது.
முன்னாள் மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா, தேனி நாடாளுமன்ற உறுப்பினர் தங்கதமிழ்ச்செல்வன் உத்தரவின் பேரில் இந்த கண்மாயை நவீன படுத்தும் திட்டம் குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.

சென்னை பாபா அணு ஆராய்ச்சி மைய அணு ஆராய்ச்சி விஞ்ஞானி டேனியல் செல்லப்பா தலைமையில் உசிலம்பட்டி நகராட்சி, பொதுப்பணித்துறை, நீர்வளத்துறை, வருவாய்த்துறை உள்ளிட்ட பல்வேறு அரசு அலுவலர்களும் ஆய்வு செய்தனர்.
திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டு கண்மாயை சுற்றிலும் நடைபாதை, படகு சவாரி, நன்மை தரும் மரங்கள் நட திட்டம் வகுக்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டது.
சாக்கடை கழிவுநீர் கலக்கப்படுவதை தடுக்கவும், சாக்கடை கழிவு நீரை சுத்திகரிப்பு செய்யவும் திட்டம் வகுக்கப்பட்டுள்ளதாகவும், கண்மாயை நவீனப்படுத்தும் திட்டம் நிறைவேறும் பட்சத்தில் குடிநீர் ஆதாரத்திற்கு மட்டுமல்லாது சுற்றுலா தளமாக மாறும் என நம்பிக்கை தெரிவித்தனர்.
