பேச்சிப்பாறை அணையில் மாவட்ட ஆட்சியர் அரவிந்த் நேரில் ஆய்வு மேற்கொண்டு, உபரிநீர் வெளியேற்றுவது குறித்தும் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் பொதுபணித்துறை மற்றும் வருவாய்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக அணைகளில் நீர்வரத்து அதிகரித்து காணப்படுகிறது. 48 அடி கொள்ளளவு கொண்ட பேச்சிப்பாறை அணை நீர் மட்டம் 46.69 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 33 ஆயிரம் கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. 77 அடி கொள்ளளவு கொண்ட பெருஞ்சாணி அணை நீர் மட்டம் 76.02 அடியாக உள்ளது. அணைகளுக்கு வினாடிக்கு 55 ஆயிரம் கன அடி தண்ணீராக பன்மடங்கு உயர்ந்து உள்ளது.
அணைகளின் பாதுகாப்பு கருதி அணைகளில் இருந்து வினாடிக்கு 27,500 கனஅடி உபரி நீர் திறந்து விடப்பட்டுள்ளது. தொடர்ந்து அணைகளின் நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்துவரும் கனமழை காரணமாக அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. மேலும் அணைகளுக்கு அதிகபடியான தண்ணீர் வந்து கொண்டிருப்பதால் அணைகளிலிருந்து மேலும் அதிகமாக உபரிநீர் திறந்துவிட வாய்ப்புள்ளது. மாவட்ட நிர்வாகம் சார்பில் 24 மணிநேரமும் கண்காணிப்பில் ஈடுபட்டுவருகின்றனர்.
பேச்சிப்பாறை அணையில் மாவட்ட ஆட்சியர் அரவிந்த் நேரில் ஆய்வு மேற்கொண்டு, உபரிநீர் வெளியேற்றுவது குறித்தும் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் பொதுபணித்துறை மற்றும் வருவாய்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். அதன் பின் செய்தியாளர்களிடம் பேசுகையில், மக்கள் நீர் நிலைகளுக்கு வேடிக்கை பார்க்க செல்லாமல் பாதுகாப்பாக இருக்க வேண்டும் எனவும், வெள்ளம் பாதிக்கும் அபாயம் உள்ள பகுதியில் வசிக்கும் மக்கள் மீட்கப்பட்டு பாதுகாப்பாக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். மேலும் 24 மணிநேரமும் போலீசார், தீயணைப்பு துறையினர், வருவாய் துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுவருவதாக தெரிவித்தார்.