• Sat. Apr 20th, 2024

என்னை மேம்படுத்த தொடர்ந்து
முயற்சிக்கிறேன்: சாம் கரன்

இங்கிலாந்து அணி பாகிஸ்தானை வீழ்த்தி டி20 உலக கோப்பையை 2-வது முறையாக கைப்பற்றியது. மெல்போர்ன் மைதானத்தில் நடந்த இறுதி ஆட்டத்தில் முதலில் ஆடிய பாகிஸ்தான் அணியால் 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 137 ரன் மட்டுமே எடுக்க முடிந்தது. இதனால் இங்கிலாந்துக்கு 138 ரன் இலக்காக நிர்ணயித்தது. ஷான் மசூத் 28 பந்தில் 38 ரன்னும் (2 பவுண்டரி, 1 சிக்சர்), கேப்டன் பாபர் ஆசம் 28 பந்தில் 32 ரன்னும் எடுத்தனர். சாம்கரன் 3 விக்கெட்டும், ஆதில் ரஷீத், கிறிஸ் ஜோர்டன் தலா 2 விக்கெட்டும், பென் ஸ்டோக்ஸ் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.

பின்னர் ஆடிய இங்கிலாந்து அணி 19 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 138 ரன் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்று உலக கோப்பையை கைப்பற்றியது. பென் ஸ்டோக்ஸ் 49 பந்தில் 52 ரன்னும் (5 பவுண்டரி, 1 சிக்சர்) கேப்டன் பட்லர் 17 பந்தில் 26 ரன்னும் (3 பவுண்டரி, 1 சிக்சர்) எடுத்தனர். பாகிஸ்தான் தரப்பில் ஹாரிஸ் ரவூப் 2 விக்கெட்டும், சதாப் கான், முகமது வாசிம் தலா 1 விக்கெட்டும் கைப்பற்றினார்கள். இங்கிலாந்து அணி 2-வது முறையாக 20 ஓவர் உலக கோப்பையை கைப்பற்றியது. இதற்கு முன்பு 2010-ல் அந்த அணி சாம்பியன் பட்டம் பெற்று இருந்தது. ஐ.சி.சி. 20 ஓவர் உலக கோப்பையை 2 முறை வென்ற வெஸ்ட் இண்டீசுடன் (2012, 2016) இங்கிலாந்து இணைந்தது.

இந்தியா (2007), பாகிஸ்தான் (2009), இலங்கை (2014), ஆஸ்திரேலியா (2021) ஆகிய நாடுகள் தலா ஒரு முறை 20 ஓவர் உலக கோப்பையை வென்றுள்ளன. இங்கிலாந்து உலக கோப்பையை வெல்ல வேகப்பந்து வீரர் சாம்கரன் முக்கிய பங்கு வகித்தார். இறுதி போட்டியில் 12 ரன் கொடுத்து 3 விக்கெட் வீழ்த்திய அவர் இந்த தொடரில் மொத்தம் 13 விக்கெட் கைப்பற்றினார். இதனால் அவர் ஆட்ட நாயகன் மற்றும் தொடர் நாயகன் என இரட்டை விருதை பெற்றார். இது குறித்து சாம்கரன் கூறியதாவது:- உலக கோப்பையை வென்றதை சொல்வதற்கு வார்த்தைகளை கொஞ்சம் இழந்து விட்டேன். இந்த வெற்றியை நாங்கள் கொண்டாடி வருகிறோம். பென் ஸ்டோக்ஸ் ஆட்டம் அபாரமாக இருந்தது. ஐ.பி.எல். போட்டியில் விளையாடிய அனுபவம் உதவியாக இருந்தது. அதில் நிறைய கற்றுக் கொண்டேன். பல போட்டிகளில் ஆடிய வீரர்களிடம் இருந்து கற்றுக் கொண்டது அற்புதமான தருணம். நான் எப்போதும் கற்று வருகிறேன். என்னை மேம்படுத்த தொடர்ந்து முயற்சிக்கிறேன். ஐ.பி.எல். போட்டியில் மீண்டும் விளையாட வருவேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார். சாம்கரன்
பஞ்சாப் கிங்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்காக ஐ.பி.எல். போட்டியில் விளையாடி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *