



உசிலம்பட்டி கோட்டாச்சியர் அலுவலகத்தில் வாக்காளர் பட்டியலின் சீர்திருத்தங்கள் குறித்து அனைத்து கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
வரும் சட்டமன்ற தேர்தலுக்கான பணிகளை அரசியல் கட்சியினர் தற்போது இருந்தே துவங்கியுள்ள சூழலில், அரசு அலுவலர்களும் சட்டமன்ற தேர்தலுக்கான முன்னேற்பாடுகளை தீவரப்படுத்தியுள்ளனர்.


இதன் ஒரு பகுதியாக மதுரை மாவட்டம் உசிலம்பட்டி கோட்டாச்சியர் அலுவலகத்தில் உசிலம்பட்டி சட்டமன்றத் தொகுதியில் உள்ள வாக்காளர் பட்டியலின் சீர்திருத்தங்கள் குறித்து அனைத்து கட்சி நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் உசிலம்பட்டி கோட்டாச்சியர் சண்முக வடிவேல் மற்றும் உசிலம்பட்டி டிஎஸ்பி சந்திரசேகரன் தலைமையில் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் திமுக, அதிமுக, மார்க்சிஸ்ட் மற்றும் காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட தேர்தல் ஆணையத்தால் அங்கீகாரம் பெற்ற கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
இக் கூட்டத்தில் வாக்காளர் பட்டியலில் கடந்த 01.01.2025 அன்று முடிய 18 வயது பூர்த்தியடைந்த இளம் வாக்காளர்களின் பெயர் சேர்த்தல், வாக்காளர் அட்டையில் தற்போது உள்ள புகைப்படத்தை இணைத்து புதுப்பித்தல், பூத் கமிட்டி உறுப்பினர்களை விரைந்து நியமிக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்வது என்றும், வாக்காளர் பட்டியலில் உள்ள பெயர்களை வீடு வீடாக சென்று ஆய்வு செய்து சரி பார்க்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது, அவ்வாறு வரும் வாக்குச்சாவடி அலுவலர் தலைமையிலான குழுவினருக்கு அரசியல் கட்சியினர் ஒத்துழைப்பு வழங்கி உதவிட வேண்டும் என கேட்டுக் கொண்டனர்.

