இன்று காலை 11:00 மணியளவில் புதுக்கோட்டை மாவட்டம் புதுக்குளம் அருகில் 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர்கள் சங்கம் சிஒஐடியு ( சென்ட்ரல் ஆர்கனைசேஷன் ஆப் இந்தியா ட்ரேட் யூனியன் ) சார்பில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் புதுக்கோட்டை மாவட்டத் தலைவர் ராஜேஷ் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் வீரமுத்து முன்னிலை வகித்தார். மாவட்டத் பொருளாளர் ராமச்சந்திரன் வரவேற்றார். இக்கூட்டத்தில் மாநிலத் துணைப் பொதுச் செயலாளர் பாஸ்கரன் சிறப்புரையாற்றினார். இக்கூட்டத்தில் புதுக்கோட்டை மாவட்டத் தொழிலாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
- புதுக்கோட்டை மாவட்டத்தில் பெருகிவரும் IFT கேஸ் எண்ணிக்கை / தொழிலாளர்களின் பணிச் சுமையை கணக்கில் கொண்டு மக்களின் தேவைக்கேற்ப கூடுதல் 108 ஆம்புலன்ஸ்கள் வழங்க வேண்டும். குறிப்பாக புதுக்கோட்டை மாவட்டம் கருவேப்பிலான் கேட் பகுதியில் புதிதாக ஆம்புலன்ஸ் சேவை தொடங்க வேண்டும்.
- சட்டப்படியான நிலையான விதிகள் அல்லது மாதிரி நிலையான விதிகள் என்று எதுவும் இல்லாத நிலையில் இயற்கை நியதியின் அடிப்படையில் விசாரணை மேற்கொள்ளாமல் EMRI-GHS நிர்வாகம் ஆளுக்கு ஒரு நீதி நிமிடத்திற்கு ஒரு நியதி என்று பாரபட்சமாக செயல்பட்டு புதுக்கோட்டை மாவட்டத்தில் பணிபுரியும் பிற மாவட்டங்களிவிருந்து தண்டனை பணியிட மாறுதலில் வந்து வேலை பார்க்கும் தொழிலாளர்களை அவர்களது சொந்த மாவட்டத்திற்கு பணியிடமாறுதல் செய்வது, பிற மாவட்டங்களில் பணிபுரியும் புதுக்கோட்டை மாவட்ட தொழிலாளர்களை மீண்டும் புதுக்கோட்டை மாவட்டத்தில் பணி வழங்க வேண்டும்.
- தொழிலாளர் ஆணையர், தொழிலாளர் தீர்ப்பாயம், தொழிலாளர் நீதிமன்றம், உயர்நீதிமன்றம் ஆகியவற்றில் தொழிற்தாவா எழுப்ப, வழக்கு தொடுப்பதற்காகவும் வழக்கில் சாட்சியம் அளிப்பதற்காகவும் மாநிலத் தலைவர், மாநில பொதுச் செயலாளர், மாநிலப் பொருளாளர், ஆகியோருக்கு அதிகாரம் அளித்தல் தொடர்பாக.
- வேலை பார்க்கும் தொழிலாளர்களின் பயோமெட்ரிக் வருகைப் பதிவேட்டை காரணம் காட்டி சம்பளவெட்டு செய்வதையும் காலதாமதமாக சம்பளம் வழங்குவதையும் கண்டித்து அதற்கு காரணமான மாவட்ட மண்டல நிர்வாக அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்த வேண்டும்.
- 108 ஆம்புலன்ஸில் உள்ள பழுதுகளை உடனுக்குடன் முறையாக சரி செய்து தர வேண்டும்.
- 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர்கள் மீது பாரபட்சமாக நடந்து கொள்ளும் மாவட்ட அதிகாரி மீது தொழில் தகராறுகள் சட்டத்தின் அடிப்படையில் வழக்கு தொடுப்பது.
- தொழிலாளர்களுக்கு சட்டப்படியான 8 மணி நேர வேலையை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன.






