கோவை, மதுக்கரை பாலத்துறை சாலை சீராபாளையம் புதூரைச் சேர்ந்தவர் சுரேஷ். அதே பகுதியைச் சேர்ந்த சக்திவேல் கட்டிட தொழிலாளிகளான இவர்கள், இருவரும் நண்பர்கள், கட்டிட வேலை முடிந்ததும் அவர்கள் இரண்டு பேரும் மது குடிப்பது வழக்கம். சம்பவத்தன்று அவர்களுக்கு இடையே திடீரென வாய் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த சுரேஷ் சக்திவேலை இரும்பு குழாயால் தலையில் தாக்கினார். இதில் படுகாயம் அடைந்த சக்திவேல் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இறந்தார்.

இந்நிலையில் சக்திவேலின் மனைவி மரகதம் தனது கணவர் குடிபோதையில் இரும்பு குழாய் மீது விழுந்ததால் தலையில் அடிபட்டு காயம் ஏற்பட்டதாக பொய்யான தகவலை கூறியதாக தெரிகிறது. ஆனால் பிரேத பரிசோதனை அறிக்கையில் சக்திவேல் இரும்பு கம்பியால் அடித்து கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது.
இதை தொடர்ந்து சுரேஷ், சக்திவேலின் மனைவி மரகதம் ஆகியோர் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு விசாரணை கோவை ஐந்தாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி சிவக்குமார் குற்றம் சாட்டப்பட்ட சுரேஷுக்கு ஆயுள் தண்டனையும், ரூபாய் 5,000 அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார்.
சக்திவேலின் மனைவி தனக்கு இரண்டு குழந்தைகள் இருப்பதாகவும், தான் படிப்பறிவு இல்லாதவர் என்றும் பொய் புகார் கொடுத்ததற்கு மன்னிக்க வேண்டும் என்றும் கூறினார். அதை ஏற்ற அவரை விடுவிக்க நீதிபதி உத்தரவிட்டார். இந்த வழக்கில் அரசு தரப்பு வழக்கறிஞர் மோகன் பிரபு ஆஜராகி வாதாடினார்.






