

வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக ராமேசுவரம், பாம்பன், மண்டபம், தொண்டி, கீழக்கரை, ஏா்வாடி உள்ளிட்ட பகுதிகளில் வழக்கத்தை விட கூடுதலாக 55 கிலோ மீட்டா் வேகத்தில் காற்று வீசுவதால் கடல் கொந்தளிப்புடன் காணப்படுகிறது. இதனால் வரும் 12 ஆம் தேதி வரையில் மீனவா்கள் கடலில் மீன்பிடிக்க மீன்வளத்துறையினா் தடை விதித்துள்ளனா்.
ராமேசுவரம், பாம்பன், மண்டபம் உள்ளிட்ட பகுதிகளில்சுமாா்1700 விசைப்படகுகள் மற்றும் 5 ஆயிரம் நாட்டுப்படகுகளை துறைமுகத்தில் பாதுகாப்புடன் நிறுத்தும் பணியில் மீனவா்கள் ஈடுபட்டுள்ளனா். 25 ஆயிரம் மீனவா்கள் மீன்பிடிக்கச் செல்லவில்லை. 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளா்கள் வேலை இழந்துள்ளனா்.
இந்நிலையில், பாம்பன் கடல் பகுதியில் கொந்தளிப்பு காணப்படுவதால் புதிய ரயில் பாலம் கட்டுமானப் பணிகள் செவ்வாய்க்கிழமை நிறுத்தப்பட்டன. காற்றின் வேகம் குறைந்த பின்னரே பணிகளை மீண்டும் தொடங்க வாய்ப்பு உள்ளதாக கட்டுமானப் பணியில் ஈடுபட்டுள்ள ஊழியா்கள் தெரிவித்தனா்.
