• Fri. Mar 29th, 2024

தமிழகத்தின் முக்கியமான 90 ஏரிகளில் 200 டி.எம்.சி. இருப்பு

Byமதி

Nov 11, 2021

வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளதால் 90 முக்கியமான ஏரிகளில் 200 டி.எம்.சி. இருப்பு உள்ளது. பாசன குளங்களைப் பொறுத்தவரையில் 4-ல் ஒரு பங்கு நிரம்பி உள்ளன. தொடர்ந்து 24 மணிநேரமும் நீர்நிலைகள் கண்காணிக்கப்பட்டு வருகின்றன.

வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப்பகுதி காரணமாக தமிழகத்தில் உள்ள நீர்த்தேக்கங்களுக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது. அதன்படி ஏரிகள் நிறைந்து குடியிருப்புகளில் சேதத்தை ஏற்படுத்தாமல் தடுப்பதற்காக 24 மணி நேரமும் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றன.

தமிழகத்தில் உள்ள மொத்த பாசன குளங்களில் 26 சதவீதம் அதாவது 3 ஆயிரத்து 691 குளங்கள் நிரம்பி உள்ளன. மொத்த குளங்களில் 4-ல் ஒரு பங்கு நிரம்பி உள்ளது. 2 ஆயிரத்து 964 குளங்களில் 76 முதல் 99 சதவீதம் வரை நீர் இருப்பு உள்ளது.

குறிப்பாக மதுரை மாவட்டத்தில் 555 குளங்கள், தென்காசியில் 333, தஞ்சாவூரில் 306, கன்னியாகுமரியில் 287, திருவண்ணாமலையில் 258 குளங்கள் நிரம்பி உள்ளன. 2 ஆயிரத்து 498 குளங்களில் 51 சதவீதம் முதல் 75 சதவீதம் வரையும், 2 ஆயிரத்து 505 குளங்களில் 26 சதவீதம் முதல் 50 சதவீதம் வரையிலும், 2 ஆயிரத்து 66 குளங்களில் 1 சதவீதம் முதல் 25 சதவீதம் வரை நீர் இருப்பு உள்ளது. இந்தநிலையில் மாநிலத்தில் இன்னும் 414 குளங்களில் தண்ணீர் இல்லாத நிலையும் உள்ளது. கடந்த ஆண்டு இதே நாளில் 629 குளங்கள் மட்டுமே நிரம்பியிருந்தன.

தமிழக பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் 90 நீர்த்தேக்கங்கள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இந்த நீர்த்தேக்கங்களின் மொத்த கொள்ளளவு 2 லட்சத்து 24 ஆயிரத்து 297 மில்லியன் கன அடி (224.297 டி.எம்.சி.) ஆகும்.

இந்த ஏரிகளில் தற்போது 1 லட்சத்து 99 ஆயிரத்து 165 மில்லியன் கன அடி நீர் இருப்பு உள்ளது. அதாவது 88.80 சதவீதம் நீர் சேமிக்கப்பட்டு உள்ளது. சுமார் 200 டி.எம்.சி. வரை ஏரிகளில் நீர் இருக்கும் நிலையில், வடகிழக்குப் பருவமழை தொடர்ந்து தீவிரமானால் நீர்தேக்கங்களின் நீர் இருப்பு மேலும் உயர வாய்ப்பு உள்ளது. எனவே அனைத்து நீர்நிலைகளுக்கும் வரும் நீரின் அளவு, வெளியேற்றப்படும் நீரின் அளவு தீவிரமாக கண்காணிக்கப்பட்டு, நிலைமைக்கு ஏற்றவாறு நடவடிக்கை எடுக்கப்படுகிறது என பொதுப்பணித்துறையின் நீர்வளத்துறை அதிகாரிகள் இத்தகவல்களை தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *