• Sun. Jan 18th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

கவர்னர் மூலம் அரசை கவிழ்க்க சதி.. முதல்வர் குற்றச்சாட்டு

ByA.Tamilselvan

Nov 9, 2022

கேரளாவில், எம்எல்ஏக்களை விலைக்கு வாங்க முடியாததால் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை கவிழ்க்க கவர்னர் மூலம் சதி நடக்கிறது என்று முதல்வர் பினராயி விஜயன் குற்றம் சாட்டியுள்ளார்.
கேரளாவில், பல்கலைக்கழக நியமனங்கள் தொடங்கி பல்வேறு பிரச்சினைகள் தொடர்பாக மாநில அரசுக்கும், கவர்னருக்கும் இடையே கருத்து வேறுபாடு இருந்து வரும் நிலையில், பல்கலைக் கழகங்களில் வேந்தர் பதவியை நீக்குவது தொடர்பாக சட்டசபையில் மாசோதா நிறைவேற்ற அரசு முனைப்புகாட்டி வருகிறது.
இந்நிலையில், கவர்னரை கண்டித்து வருகிற 15-ம் தேதி கவர்னர் மாளிகை நோக்கி பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம் நடத்த இடது முன்னணி அழைப்பு விடுத்துள்ளது. இதில் லட்சக்கணக்கான தொண்டர்கள் பங்கேற்பார்கள் என்று கூறப்படுகிறது. இந்தநிலையில், கேரளாவில் அரசியல் சாசனத்திற்கு எதிராக ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் செயல்படுவதாக கவர்னர் ஆரிப் முகம்மது கான் கூறியிருந்தார். மேலும், பொது விவாதம் நடத்த தயார் என்றும் கவர்னர் மாளிகைக்கு வந்து பாருங்கள் எனவும் சவால் விடும் வகையில் கருத்துகளை கூறி இருந்தார்.
இதற்கு பதில் அளிக்கும் வகையில் பினராயி விஜயன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கேரளாவில் எம்எல்ஏக்களை விலைக்கு வாங்க முடியாததால், அவர்களது குதிரை பேரம் நடக்காததால், அரசியல் சாசனத்திற்கு எதிராக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை கவிழ்க்க கவர்னர் மூலம் சதி நடக்கிறது. நாட்டில் முக்கியமாக பாதுகாக்கப்பட வேண்டிய இடங்கள், நிறுவனங்கள் கூட இப்போது தனியார் மயமாக்கப்பட்டு விட்டது. மாநில அரசுக்கு உரிமைப்பட்ட பொது நிறுவனங்கள் அனுமதி இன்றி மத்திய அரசு தனியாருக்கு விற்கிறது. ரயில்வேயில் புதிய வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படவில்லை. 2 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு அளிக்கப்படும் என்று கூறினார்கள்; ஆனால், 10 லட்சம் பணி இடங்கள் நியமனங்கள் இன்றி காலியாக கிடக்கிறது” என்று அதில் கூறப்பட்டுள்ளது.