புதுக்கோட்டையில் தமிழக மக்கள் முன்னணியின் சார்பில் மாநாடு நடத்தப்பட்டது. மத்திய அரசு மாநில அரசுகளின் உரிமைகளை பறிக்கிறது என்றும் அந்த உரிமைகளை மீண்டும் திரும்ப பெறுவதற்காக உரிமைப் பறிப்பு எதிர்ப்பு மாநாடு என்ற பெயரில் நடத்தப்பட்ட இந்த மாநாட்டுக்கு தமிழறிஞர் பொழிலன் தலைமை வகித்தார். மார்க்சிய மற்றும் பெரியாரியல் தமிழ் தேசியச் சிந்தனையாளர்கள் அமைப்புகள் இணைந்து நடத்திய இந்த மாநாடு புதுக்கோட்டையில் மிகப்பெரிய அரசியல் மாற்றத்திற்கான விதை போட்டு இருக்கிறது.

இந்த நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்க வந்திருந்த திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி அவர்கள் வெளியிட்டிருந்த கருத்துகள் மீண்டும் தமிழகத்தை ஒரு போராட்டக் களமாகத் தயார் படுத்தியிருக்கிறது.
அவர் செய்தியாளர்களுக்குப் பேட்டியளிக்கும்போது கொளத்தூர் மணி பேசுகையில் தமிழக மக்கள் முன்னணியின் முன்னெடுப்பில் மாநில உரிமைப் பறிப்பு எதிர்ப்பு மாநாடு இங்கே நடைபெறுகிறது. அதில் 12 தீர்மானங்களை இங்கு இயற்றி இருக்கிறார்கள்.
தொடர்ச்சியாக இந்திய அரசு என்று சொல்லிக் கொண்டிருக்கிற ஒன்றிய அரசு தேசிய இனங்களை அழித்து ஒற்றை இந்தியர்களாக மாற்ற வேண்டும் என்று நினைக்கிறது. ஒவ்வொருவரும் இந்து மதங்கள் சார்ந்த கருத்துகளாக இருக்க வேண்டும் என்றும் அவர்கள் சொல்கின்ற மொழி தான் ஆட்சி மொழியாக இருக்க வேண்டும் என்றும் சொல்லிக் கொண்டிருக்கும் இந்த வேளையில் பல்வேறு கோரிக்கைகளை நாம் எழுப்புகிறோம். உயர் நீதிமன்றத்தில் தமிழ் வழக்காடு மொழியாக இருக்க வேண்டும் என்றால் அது முடியாது. உயர் நீதிமன்றத்தில் தலைமை நீதிபதிகளாக தமிழர்கள் இருப்பார்கள் என்றால் அவர்கள் இருக்கவில்லை என்பதை நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.

நமது மண்ணில் கட்டப்பட்ட கல்லூரிகளில், நமது பல்கலைக்கழகங்களில் நம்முடைய மாணவர்களை சேர்ப்பதற்கு அதிகாரம் அற்றவர்களாகத் தேர்வுகளை திணிக்கிறார்கள். தங்களால் எதையும் செய்ய முடியும் என்ற நினைப்பில் இருக்கிற ஒன்றிய அரசு நம்முடைய சிந்தனைகளை தொடர்ந்து மீண்டும் மீண்டும் தூண்டி விட்டுக் கொண்டே இருக்கின்றது. தேசிய இனங்கள் தாங்கள் விரும்பிய அரசை அமைத்துக் கொள்ள அவர்களுக்கு உரிமை உள்ளது என்று உலக நாடுகள் அரசியல் சாசனம் சொல்கின்றது. ஆனால் இங்கு மட்டும் அப்படி இல்லை. எண்ணிக்கையில் பார்த்தால் அவர்கள் எண்ணிக்கை தான் அதிகமாக இருக்கிறது என்பதால் அவர்கள் முடிவைத்தான் அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்கிற நிலை இருக்கிறது. அவற்றை மாற்றுவதற்கான வடிவங்களாக தான் தீர்மானங்களாக இந்த மாநாட்டில் இயற்றி இருக்கிறோம்.
நம்முடைய கோரிக்கை என்ன என்பது வடவருக்கு தெரியாது. கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் நடத்திய போராட்டம் என்பது நீட் தேர்வு நேர்மையாக நடக்க வேண்டும் என்பதாகும். ஆனால் நாம் நீட் தேர்வு வேண்டாம் என்று சொல்கிறோம். இரண்டுக்கும் வேறுபாடு இருப்பதால் நமது கொள்கை கூட அவர்களுக்குச் சென்று எட்டாது. ஆனாலும் தமிழ்நாட்டில் அப்படி ஒரு பிரச்சனையை கொண்டுவர மத்திய அரசு ஏற்பாடு செய்கிறது. மேகதாது பிரச்சனையில் தமிழ்நாடு அரசு தயங்குகிறது என்றால் அவர்களுக்கு அரசியல் அழுத்தம் ஏதாவது இருக்கலாம். நமக்கு இப்போது உள்ள பிரச்சனை மேகதாது பிரச்சனை. ஆனால் அதற்குள் டீ லிமிடேஷன் பிரச்சனையை கொண்டு வந்து காட்டுகிறார்கள். தோற்றுப் போன டி லிமிடேஷன் பிரச்சினை இப்போது காட்ட வேண்டியது இல்லை. இதுவரை தேசிய கீதம் நாம் பாடிக் கொண்டிருக்கிறோம் ஆனால் அதற்கு என்ன பொருள் என்று யாருக்கும் தெரியாது. வந்தே மாதரம் பாடலை பாட வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்துவது நமக்கு அந்த மொழியே தெரியாது. எங்களுக்கு புரியாத எதுவும் எங்களது பிள்ளைகளுக்கு தேவையில்லை. எனவே எங்களுக்கு புரிந்த எங்களுக்கு தெரிந்த எங்கள் மொழியில் தான் பாடப்பட வேண்டும் என்றார்.
அவருக்கு முன்னதாக பேசிய தமிழ்த்திரு அவர்கள் கூறுகையில் அடிப்படையில் நமது மாநில உரிமைகள் பறிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன.
இந்திய அடையாளங்களையே அழித்து வருகிறது இந்திய அரசு. இதைக் கடுமையாகக் கண்டித்து தான் இந்த மாநாடு நடைபெறுகிறது.

சுங்கச்சாவடியில் வரிப்பறிப்பு நடைபெறுகிறது. கனிம வளங்கள் சூறையாடப் படுகின்றன. கடல் வளம் பறிபோகிறது. கல்வி உரிமையை முழுமையாக இழந்திருக்கிறோம். எல்லாவற்றிலும் மத்திய அரசு வரியை வாரிச் சுருட்டிக் கொண்டு போய்க் கொண்டு இருக்கிறது. கடந்த 12 ஆண்டுகளாக நாம் செலுத்திக் கொண்டிருக்கும் வரிகள் மத்திய அரசுக்குச் சென்று சேருகின்றனவா என்பது தெரியவில்லை . உலகத்திலேயே ஓர் இன மக்கள் தங்களது இனத்தை இந்த இனம் என்று பதிவு செய்ய முடியாது. அது இந்தியாவில் மட்டும் தான் இருக்கிறது. உலக நாடுகள் அனைத்திலும் தேசிய இன மக்கள் தங்களது தேசிய இனத்தை பதிவு செய்கிறார்கள். ஆனால் இந்தியாவில் அது முடியாது. தமிழ்நாட்டில் தமிழன் என்று பதிவு செய்ய முடியாது. கேரளாவில் மலையாளிகள் தாங்கள் மலையாளிகள் என்று பதிவு செய்ய முடியாது. உலகத்தில் அனைத்து இன மக்களும் அவரவர்கள் இனத்தை பதிவு செய்கிறார்கள்.
இவற்றையெல்லாம் கண்டித்து தான் 12 தீர்மானங்களாக இயற்றப்பட்டு இருக்கின்றன. இதில் பன்னிரண்டாவது தீர்மானமாக ஜிஎஸ்டியை கட்டக்கூடாது என்ற தீர்மானத்தை இயற்றி இருக்கிறோம். அதற்காக அனைத்து வணிகர்களுக்கும் பெரும் முதலாளிகள் சிறு முதலாளிகளுக்கும் அறிவிப்பாக தெரியப்படுத்த இருக்கிறோம். இது வரி கொடா இயக்கமாக ஜிஎஸ்டி மறுப்பு இயக்கமாக இயங்க இருக்கிறது. அதைத்தான் இந்த மாநாட்டில் முன்மொழிகிறோம் என்றார்.
இந்த மாநாட்டில் பொதுவுடைமைச் சித்தாந்தங்கள் மட்டுமல்லாது பெரியாரியக் கருத்துகளைக் கொண்டவர்களையும் அழைத்துப் பேச வைத்து அவர்களது கருத்துகளையும் பரப்பியதும் தமிழறிஞர்களைக் கவுரவித்து பல பரிசுகளை வழங்கியதும் மிகப் பெரிய பெண் போராளியான அற்புதத்தம்மாள் அவர்களையும் அழைத்து கவுரவித்தது என்பது அனைத்து அரசியல் பார்வையாளர்களையும் உற்று நோக்கச் செய்திருக்கிறது.





