மதுரை மாவட்டம் சோழவந்தான் பேரூராட்சி 5வது வார்டு வைத்தியநாதபுரம் பகுதியை சேர்ந்த துளசி தேவி தவமணி இவர்களின் மகள் சுபஸ்ரீ சோழவந்தான் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்த வந்த நிலையில் பள்ளி விடுமுறை நாளான கடந்த சனிக்கிழமை மதியம் தனது வீட்டு மாடியில் காய போட்டு இருந்த துணிகளை எடுக்கச் சென்றபோது மாடி அருகே சென்ற உயர் அழுத்த மின்கம்பியிலிருந்து மின்சாரம் தாக்கியதில் மருத்துவமனை கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் உயிரிழந்த சுப ஸ்ரீ குடும்பத்தினரை சோழவந்தான்
அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியை மற்றும் ஆசிரியைகள் பணியாளர்கள் நேரில் சென்று ஆறுதல் கூறினர். அப்போது சுபஸ்ரீ யின் தாயார் தனக்கு நான்கு பெண் குழந்தைகள் இருந்த நிலையில் மின்சாரம் தாக்கி ஒரு மகள் உயிரிழந்து விட்டது கடும் சோகத்தை ஏற்படுத்திருப்பதாகவும் தனது மூன்று மகள்களின் உயர்கல்வி படிப்பை அரசு ஏற்க வேண்டும்.

மேலும் தனது குடும்பத்திற்கு நிதி உதவியும் அரசு விடுதியில் தற்காலிக பணியாளராக பணிபுரியும் தனக்கு அரசு வேலை வழங்கி தனது குடும்பத்தின் வறுமையை போக்க வேண்டும் எனவும் கண்ணீர் மல்க அரசுக்கு வேண்டுகோள் விடுத்தார். முன்னதாக சோழவந்தான் பேரூராட்சி தலைவர் எஸ் எஸ் கே ஜெயராமன் பேரூர் திமுக செயலாளர் வழக்கறிஞர் சத்திய பிரகாஷ் மற்றும் நிர்வாகிகள் சுபஸ்ரீயின் குடும்பத்தினர் மற்றும் சகோதரிகளை சந்தித்து ஆறுதல் கூறி சென்றனர்.