மதுரையில் உணவக உரிமையாளர்கள் சங்கம் சார்பில் கறிக்கோழி விலை உயர்வை கண்டித்து ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தம் குறித்து, கோரிப்பாளையத்தில் தனியார் உணவகத்தில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் அனைத்து உணவகங்கள் பேரவை தலைவர் முகம்மது ரபீக் கூறியதாவது:-
மதுரையில் உணவகங்களுக்கு மொத்தவிலையில் வழங்கபட்டு வந்த கறிக்கோழியின் விலை திடீர் உயர்வால் உணவக உரிமையாளர்கள் பெரும் நஷ்டத்தை சந்திக்க வேண்டி வருவதாகக் கூறி அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு அனைத்து அசைவ உணவகங்களும் ஒருநாள் விடுமுறை அளிக்கப் பட்டுள்ளது.
மேலும் ஏற்கனவே தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் நோயினால் உணவக உரிமையாளர்கள், உணவக பணியாளர்கள் மற்றும் உணவக தொழிலில் ஈடுபட்டுவரும் பல்வேறு குடும்பத்தினர் பொருளாதார சூழலில் மிகவும் பின்தங்கி உள்ளனர். தற்சமயம் புரட்டாசி மாதம் என்பதால் அசைவ உணவு விற்பனையிலும் மந்தம் ஏற்பட்டுள்ள நிலையில் கறிகோழி விலை ஏற்றத்தினால் தொடர்ந்து தொழில் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
எனவே எங்களின் கோரிக்கையை ஏற்று கறிக்கோழி விலையினை உடனே குறைத்திட வேண்டும் எனவும், விலையை குறைக்காத சூழல் ஏற்பட்டால் தமிழகத்தில் உள்ள அனைத்து உணவகங்களிலும் உணவு பட்டியலில் இருந்து கோழி இறைச்சி சம்பந்தப்பட்ட உணவு வகைகள் முற்றிலும் நீக்கப்படும் என கூறினர்.
மேலும் இந்நிகழ்ச்சியில் மதுரை சுப்ரமணியபுரம் ஏஜே மஜு ஹோட்டல் உரிமையாளர் ஜாகிர்பாய், மதுரை செல்லூர் நவீன் ஹோட்டல் உரிமையாளர் உள்பட உணவக உரிமையாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.