• Wed. Sep 23rd, 2026
WhatsAppImage2026-09-17at2324521
previous arrow
next arrow
Read Now

ஒன்றிய கலாச்சாரத்துறை அமைச்சருக்கு கண்டனம்..,

ByKalamegam Viswanathan

Sep 22, 2026

தனியார் ஊடகத்திற்குப் பேட்டியளித்துள்ள ஒன்றிய கலாச்சாரத்துறை அமைச்சர் மாண்புமிகு கஜேந்திர சிங் செகாவத் அவர்கள் , கீழடி குறித்த அமர்நாத் இராமகிருஷ்ணன் அவர்களின் ஆய்வறிக்கையை “முந்தைய ஆட்சியின் அரசியல் திணிப்பால் உருவாக்கப்பட்டது” எனக் கூறியிருக்கிறார். இதுவரை நீதிமன்றத்திலும் நாடாளுமன்றத்திலும் இவ்வறிக்கை பற்றி கேள்வி எழுப்பப்பட்ட போதெல்லாம், “நிபுணர் குழுவின் பரிசீலனையில் உள்ளது” எனக் கூறிய அமைச்சர், இப்பொழுது பொதுவெளியில் இந்த அறிக்கைக்கு அரசியல் நோக்கத்தைச் சுமத்துகிறார்.

அறிக்கையில் அறிவியல் குறை இருந்தாலோ, காலக்கணிப்பில் சந்தேகம் இருந்தாலோ, ஆய்வுமுறையில் குறை இருந்தாலோ நிபுணர்கள் அதை நிரூபிக்கலாம். ஆனால், ஓர் ஆய்வறிக்கையே அரசியல் திணிப்பின் விளைவு என்று கூறுவது அப்பட்டமான அநீதி.

தொல்லியல் ஆய்வுக்கு நெறிமுறைகள் இருப்பதாகவும், இந்த அறிக்கையில் அது மீறப்பட்டுள்ளதாகவும் ஒன்றிய அமைச்சர் கூறுகிறார். அதனை நீதிமன்றத்திலே, நாடாளுமன்றத்திலே ஏன் கூறவில்லை? ஆய்வறிக்கைக்கு எதிராக அறிவியல் உண்மைகள் இருக்குமாயின், அதை வெளியிடும் துணிவு உங்களுக்கு ஏன் இல்லை?
அயோத்தி, துவாரகா, சரஸ்வதி, கீழடி — இடம் மாறினாலும் அறிவியல் அளவுகோல் மாறக்கூடாது; தொல்லியல் அளவுகோல் மாறக்கூடாது. ஆனால், ஒன்றிய அரசு கீழடி அகழாய்வை அணுகிய விதமும், மற்ற இடங்களில் நடந்த அகழாய்வை அணுகிய விதமும் ஒன்றா?

கீழடியின் முக்கியத்துவம் மண்ணுக்குள் புதைந்திருந்த வரலாற்றை அறிவியல் வெளிச்சத்திற்குக் கொண்டுவருவதில்தான் இருக்கிறது. அரசியல் அதிகாரத்தின் விருப்பத்திற்கேற்ப அதை மறைக்கவும் முடியாது; மாற்றவும் முடியாது.
வரலாறு அதிகாரத்தின் கட்டளையால் எழுதப்படுவதில்லை; அதிகாரத்தை வீழ்த்தியே எழுதப்படுகிறது.

கீழடி அறிக்கையில் முந்தைய திமுக ஆட்சியின் அரசியல் இருப்பதாகச் சொல்லும் ஒன்றிய கலாச்சாரத்துறை அமைச்சரே, அதற்கு முந்தைய அதிமுக ஆட்சிக் காலத்திலேயே கீழடியில் எதுவும் இல்லை என்று சொல்லி அகழாய்வைக் கைவிட்டு வெளியேறியதுதானே உங்களது கலாச்சாரத்துறை?

இன்றளவும் கீழடி சார்ந்த அரசியல் ஒன்றே ஒன்றுதான்: வேதகாலத்திற்கு முந்தைய தமிழர்களின் தொன்மை நாகரிகத்தை அறிவியல் பூர்வமாக ஏற்பவர்கள் ஒருபக்கம்; அதை ஏற்க மறுக்கும் இந்துத்துவக் கூட்டம் மறுபக்கம். நீங்கள் அந்தப் பக்கத்திலிருந்துதான் தொடர்ந்து செயல்பட்டு வருகிறீர்கள் என்பதை நாடறியும்.

கீழடி அகழாய்வு அறிக்கையை வெளியிடாமல் தடுத்து மறைக்க நினைக்கும் மோடி ஆட்சியின் சூழ்ச்சி ஒருபோதும் வெற்றியடையப் போவதில்லை. கீழடியை யாரும் தாழிட முடியாது! என பாராளுமன்ற உறுப்பினர் சு வெங்கடேசன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.