கோவை மதுக்கரை அடுத்த நாச்சிபாளையம் பகுதியில் வீட்டிற்குள் புகுந்து கொள்ளை அடிக்க முயன்ற மர்ம நபரைப் பொதுமக்கள் கையும், களவுமாகப் பிடித்து, மரத்தில் கட்டி வைத்துப் போலீஸாரிடம் ஒப்படைத்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கோவை, மதுக்கரை அருகே உள்ள நாச்சிபாளையம் கூலி மேடு பகுதியைச் சேர்ந்தவர் வீட்டின் பூட்டை உடைத்துக் கொண்டு மர்ம நபர் ஒருவன் திருடும் நோக்கில் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து உள்ளான்.
வீட்டின் உள்ளே இருந்த பீரோவை உடைத்து நைஸாகப் பணம் மற்றும் நகைகளைக் கொள்ளை அடிக்க அந்த நபர் முயன்று உள்ளான்.

அப்போது பீரோவை உடைக்கும் போது ஏற்பட்ட சத்தம் கேட்டு, வீட்டில் இருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்து விழித்துக் கொண்டனர்.
வீட்டின் உரிமையாளர்கள் உடனடியாக “திருடன்… திருடன்…” எனக் கூச்சலிடவே, சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் மற்றும் கூலி மேடு பகுதி பொதுமக்கள் திரண்டு ஓடிவந்தனர். தப்பியோட முயன்ற அந்த மர்ம நபரைச் சுற்றி வளைத்துத் துரத்திச் சென்று கையும், களவுமாகப் பிடித்து உள்ளனர்.
ஆத்திரம் அடைந்த பொதுமக்கள், அந்த நபர் தப்பிச் செல்லாதவாறு அருகில் இருந்த மரத்தில் கயிற்றால் கட்டி வைத்தனர். பின்னர் இது குறித்து உடனடியாக மதுக்கரை காவல் நிலையத்திற்குத் தகவல் தெரிவித்தனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மதுக்கரை போலிஸார், மரத்தில் கட்டி வைக்கப்பட்டு இருந்த அந்த நபரை மீட்டு விசாரணைக்காகக் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.
பிடிபட்ட நபர் யார், எந்த ஊரைச் சேர்ந்தவர், இதற்கு முன் வேறு ஏதேனும் கொள்ளைச் சம்பவங்களில் தொடர்புடையவரா ? என்ற கோணத்தில் போலிஸார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.



